நடிகர் தனுஷும், ரஜினியின் மூத்த மகள் ஐஷவர்யாவும் காதலித்து கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 18 வருடங்கள் சுமூகமாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
தனுஷும், ஐஷ்வர்யாவும் தாங்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இருவரும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோராக ஒன்றாக பயணித்து வந்துள்ளோம். இந்த பயணம் முழுவதிலும், வளர்ச்சி, புரிதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம்.
ஆனால், இன்று இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நானும் ஐஷ்வர்யாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரையும் புரிந்து கொண்டு, இதில் இருந்து இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தை அனைவரும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்களுடைய முடிவை ஏற்று எங்களது தனிமையை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டிருந்தனர்.
இவர்களின் இந்த முடிவு தனுஷ் மற்றும் ரஜினியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஐஸ்வர்யாவுக்கு ஆன்மிகத்தில் எழுந்த நாட்டம்தான் விவாகரத்துக்கு காரணம், இல்லை இல்லை தனுஷ் மீது தொடர்ந்து கிசுகிசு வந்ததுதான் விவாகரத்துக்கு காரணம் என பலர் பல காரணங்களை கூறிக்கொண்டிருந்தாலும் அவர்களது பிரிவை ஆய்வு செய்யாமல் அதனை மதிக்க வேண்டுமென்பது ஒரு தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.
இந்தச் சூழலில் ஏற்கனவே ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவும் விவகாரத்து ஆனவர். தற்போது ஐஸ்வர்யாவும் விவகாரத்து ஆகியுள்ளார் எனவே இது ரஜினிக்கு மனதளவில் பெரும் நெருக்கடியை குடுக்கக்கூடும் என கருதும் அவரது ரசிகர்கள் அவருக்கு ட்விட்டரில் ஆறுதலை தெரிவித்துவருகின்றனர்.
அதேசமயம் சௌந்தர்யா விவாகரத்து ஆனாலும் அதிலேயே அவர் உடைந்து விழாமல் தனது அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தார். அதற்கு ரஜினியும் முழு சம்மதம் அளித்து தன்னால் முடிந்த சப்போர்ட்டை அளித்தார். அதுமட்டுமின்றி, சௌந்தர்யாவின் இரண்டாவது திருமணத்தை ரஜினி முன் நின்று நடத்தி வைத்ததை பலர் பாராட்டினர்.
அதேபோல் ஐஷ்வர்யாவும் தனது அடுத்தக்கட்டத்துக்கு நகரும்போது நிச்சயம் ரஜினி அவருக்கு துணை நிற்பார். பிரிவுக்கு பிறகுதான் வாழ்வில் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும்போது ஒரு நிதானமும், தெளிவும் வரும். அப்படி சௌந்தர்யாவின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு துணை நின்ற ரஜினி ஐஸ்வர்யாவுக்கும் நிற்காமலா போய்விடுவார் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்