என் வாழ்க்கையில் எனக்கு தொழில் ரீதியாக கிடைத்த வெற்றியாகட்டும். காதலாகட்டும். துணைவியாகட்டும் எல்லாமே கடவுள் கொடுத்தது என்று தத்துவார்த்தமாகப் பேசியிருக்கிறார் நடிகர் தனுஷ்.


கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட்டையை கிளப்பி வருகிறார் நடிகர் தனுஷ். ”இவரா ஹீரோ “ என்றவர்கள் எல்லாம் , தனுஷின் கால் ஷீட்டிற்காக வரிசையில் காத்திருப்பதை நாமே அறிவோம். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த உதராணமே தனுஷ்தான் என்றால் மிகையில்லை. 


இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளையமகன் தனுஷ். இயக்குனர் செல்வ ராகவனின் தம்பி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்பம்சங்களை உடைய அவர், தமிழ், இந்தி திரையுலகு தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்று வென்று வந்திருக்கிறார். 2002ல் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமான அவர், ஒரு பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் படிப்படியாக உயர்ந்து சகலகலா வல்லவன் என்ற இலக்கை எட்டிக் கொண்டிருக்கிறார்.




ஆடுகளம் தந்த தேசிய விருது:


2011 ஆம் ஆண்டில் அவர் நடித்த ‘ஆடுகளம்’ படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்காக ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ மற்றும் ‘ஃபிலிம்ஃபேர் விருது’ கிடைத்தது.


2012ல் ‘3’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விஜய் விருதை வென்றார். ‘3’ படத்தில் அவர் எழுதிப் பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல், யூடியூபில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்வையிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார். ஏன் உலகளவில் கவனம் பெற்றார் எனலாம். வெளிநாட்டினர் கூட இந்தப் பாடலுக்கு ஃப்ளாஷ் மாப் மோடில் ஆட்டம் போட்டு அமோக வரவேற்பு கொடுத்தனர்.


2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் அசுரன் படத்திற்காகப் பெற்றிருந்தார்.


பக்குவமான அணுகுமுறை:


தனுஷ் வளர வளர கதைத் தேர்வு தொடங்கி எல்லாவற்றிலும் பக்குவமடைந்தார் எனலாம். அண்மையில் அவர் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் கூட தன்னை மாஸ் ஹீரோவாகக் காட்டுவதைவிட ஹீரோயினுக்கு ஸ்கோர் பண்ண வாய்ப்பு கொடுத்து நடித்திருக்கிறார்.


தனுஷுக்கு இந்தப் படத்தால் புகழ்ச்சி பாய்ந்துவரும் வேளையில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவியில் காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் அளித்த பேட்டி வைரலாகிக் கொண்டிருக்கிறது.


அதில் அவரிடம் டிடி 21 வயதில் திருமணம் நடந்தது பற்றி கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு அவர், என் வாழ்க்கையில் எனக்கு தொழில் ரீதியாக கிடைத்த வெற்றியாகட்டும். காதலாகட்டும், துணைவியாகட்டும் எல்லாமே கடவுள் கொடுத்தது என்று தத்துவார்த்தமாகப் பேசியிருக்கிறார்.


"உண்மையில் நம் வாழ்க்கையில் நடப்பது எல்லாமே கடவுள் கொடுத்தது தானே. கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் ஏதோவொரு சக்தி வழிநடத்துகிறது.. நம்மை சுற்றிய நிகழ்வுகள் தீர்மானிக்கின்றன என வைத்துக் கொள்ளலாம்" என்றார்.