இசை என்பது பேரூற்று என்றால் அதில் குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை வற்றாத பேரூற்று. அவரது சினிமா இசை ஒரு அனுபவம். அவரது ஒவ்வொரு பாடலும் வரலாறு எனச் சொன்னால் மிகையில்லை. ஒவ்வொரு பாடல் இசையமைப்புக்கும் பின்னணியில் அப்படி அழுத்தமானதொரு கதை இருக்கும். அவரது இசைக்காகவே படம் இயக்கிய இயக்குநர்கள் ஏராளம்.
தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்குப் பிறகு அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகினாலும் இளையராஜாவின் இசையை ரசிக்க யாரும் தயாராக இல்லை. இசைக்கு எல்லை கிடையாது என்பதை உணர்த்தும் வகையில், இன்று வரை தனது இசைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். கிட்டத்தட்ட 1400 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவின் இசைக்கச்சேரிகளுக்கும் எக்கசக்க ரசிகர்கள் உள்ளனர்.
வரவேற்பை பெற்ற இளையராஜாவின் கதைகள்
அங்கு அவரது இசை மட்டுமல்லாது, அந்த இசையை அவர் உருவாக்கியது குறித்தும் அவர் பேசும் சுவாரஸ்சியமான கதைகள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் இளையராஜா நாளை சென்னையில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்த இருக்கிறார். இந்த இசைக்கச்சேரியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பாட இருக்கிறார்.
இந்த நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட தேவி ஸ்ரீ பிரசாத், “ கனவு நனவாகப் போகிறது” என்று பதிவிட்டதோடு இளையராஜாவோடு இணைந்து பாடப்போகிறேன் என்ற செய்தியை பகிர்ந்திருந்தார். இதை பார்த்த இளையராஜா அதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, “ உன்னை மேடையில் சந்திக்கிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் அண்மையில் புஷ்பா படத்திற்கு இசையமைத்த அனைத்து பாடல்களும் மாபெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.