ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஹூக்கும்’ பாடல் இணையத்தை கலக்கி வரும் நிலையில், அந்த பாடலை எழுதிய சூப்பர் சுப்பு குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, ஜீவிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து காத்திருக்கும் அப்டேட்டுகள்
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நடப்பாண்டு ஜூன் இறுதியில் முடிவுக்கு வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் படத்தில் இடம் பெற்ற தீம் மியூசிக் ரிலீசானது. தொடர்ந்து ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி அவரின் ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இதற்கிடையில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி “காவாலா” பாடல் வெளியானது. இந்த பாடல் பலரின் ஃபேவரைட்டாகவும், இணையத்தில் ட்ரெண்டிங்கிலும் உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம், ஜெயிலர் படத்தில் இருந்து ‘ஹூக்கும்’ பாடல் வெளியானது. சூப்பர் சுப்பு எழுதியுள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த பாடலின் தொடக்கத்தில் ரஜினியின் குரலில் பன்ச் வசனங்கள் இடம் பெறுகிறது.
அதனைத் தொடர்ந்து வரும் பாடல் வரிகள் பல ஆண்டுகளாக தீவிர எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் வரிகளுடன் அமைந்துள்ளது. அனைத்து வரிகளும் தாறுமாறாய் எழுதப்பட்டுள்ள நிலையில், பாடலாசிரியர் சூப்பர் சுப்பு யார் என்ற கேள்வி இணையத்தில் உலா வர தொடங்கியுள்ளது.
யார் அந்த சூப்பர் சுப்பு?
கதையாசிரியர், எடிட்டர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், ஓவியர், வடிவமைப்பாளர், கட்டிட கலைஞர் என பன்முகம் கொண்டவர் சூப்பர் சுப்பு. இவர் தமிழில் ஆரோகணம், தாராள பிரபு, ஓ மை டாக், வட்டம் உள்ளிட்ட படங்களில் பாட்டு எழுதியுள்ளார். சில ஆல்பம் பாடல்களையும் எழுதியுள்ளார். இப்படியான நிலையில் தான் ஜெயிலர் படத்தில் ‘ஹூக்கும்’ பாடலை எழுதியுள்ளார்.
அவரை வாழ்த்தி பதிவிட்டுள்ள வளர்ந்து வரும் பெண் இயக்குநர் சரண்யா சுப்பிரமணியம், “7 வருடங்களுக்கு முன்னாள் இதே நேரத்தில் தலைவர் ரஜினி நடித்த கபாலி படத்திற்கு டீ-ஷர்ட் டிசைன் செய்து கொண்டாடினாய். இன்று ரஜினியின் படத்திற்கு பாடல் எழுதியவராக இந்த உலகிற்கு அறிமுகமாகியுள்ளார். உன்னை நினைத்தால் பெருமையாக உள்ளது’ என கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் திறமைக்கு ஒருநாள் உரிய மரியாதை கிடைக்கும் என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளனர்.