கர்நாடகாவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலை அமைக்க தேசிய தலைவர் படக்குழுவினர் சார்பில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.ஷிவகுமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ட்ரென்ட்ஸ் சினிமாஸ், எம்.டி.சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் தேசிய தலைவர் என்ற படம் தயாராகி உள்ளது. இந்த படம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் மறைக்கப்பட்ட வரலாறு என்ற கருவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேவர் கேரக்டரில் ஜெ.எம்.பஷீர் நடித்துள்ளார். இந்த படத்துக்காக இஸ்லாமியரான பஷீர் 48 நாட்கள் விரதமிருந்து நடித்துள்ளார்.
அரவிந்த் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக தேசிய தலைவர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்தரனின் மகனான தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர். கண்ணனுக்கும், ஃபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் வி.எஸ்.நவமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
முன்னதாக தேசிய தலைவர் படம் எடுக்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்தரின் மகனான தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர். கண்ணன் உதவி செய்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் படத்தில் எஸ்.எஸ்.ஆர். வரக்கூடிய 6 காட்சிகளிலும் கண்ணன் தான் நடித்துள்ளார். இந்த பிரச்சினை திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக ஒரு பேட்டியில் அரவிந்த்ராஜ் , “தேசிய தலைவர் படம் சாதியத்தை மையப்படுத்திய படம் இல்லை என்றும், முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையே ஒரு சினிமா போலதான் இருந்திருக்கிறது” எனவும் கூறியிருந்தார். மேலும் ‘படத்தை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பாக எடுத்துள்ளோம். படத்தில் அவரின் அரசியல் வாழ்க்கை மட்டுமே பேசப்பட்டுள்ளது. தேவர் பற்றி இன்றைய தலைமுறைக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக படம் எடுத்துள்ளோம்’ என தெரிவித்திருந்தார்.
இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தேசிய தலைவர் படம் கன்னடத்தில் ராஷ்டிரிய நேத்தா என்ற பெயரில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.ஷிவகுமாரை இன்று தேசிய தலைவர் படத்தின் ஹீரோ ஜே.எம்.பஷீர் கர்நாடக தேவர் அமைப்பை சார்ந்தவர்களுடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். அப்போது கர்நாடகாவில் தேசிய தலைவர் தேவர் சிலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.