டிமான்டி காலனி 2 (Demonte Colony 2) திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த டிமான்டி காலனி 1 படத்தின் அடுத்த பாகமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
விரைவில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த விழாவில் இயக்குநர் அஜய் ஞானமுத்து (Ajay Gnanamuthu) பேசியதாவது:
‘தூக்கி விட கை வேணும்’
“தயாரிப்பாளர் பாபி சார், அவர் தான் இந்தப்படம் பெரிதாக வரக் காரணம். ஒரு படம் இயக்கும்போது இயக்குநருக்கு அந்தப்படத்தின் செலவைக் குறைக்க மனது வராது, படத்தைத் தரமாகத் தரத்தான் நினைப்பார்கள். ஆனால் ஒருகட்டத்தில் எங்களால் முடியாத போது அதற்கு ஆதரவாகக் கிடைத்தவர் தான் சுப்பிரமணியன் சார். அவருக்கு என் நன்றி. நாம் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். தாத்தா பேரில் ஆரம்பித்து அப்பாவை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டேன். என் அப்பாவுக்கு நன்றி.
சாம் சி எஸ் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல ஒரு இயக்குநராகவும் படத்தை அணுகுகிறார் அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் ஹரீஷ் என்னுடன் நின்றார். அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் அருண் பாண்டியன் சார் மிகவும் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தார். எல்லாவற்றைப் பற்றியும் கேட்டுக்கொண்டே இருப்பார், அவருக்கு நன்றி. பிரியாவுக்கு மிக முக்கியமான ரோல். அவர் கேரியரில் முக்கியமான படமாக இப்படம் இருக்கும்.
தேடி வந்த அருள்நிதி
என் கோப்ரா படத்துக்கு சரியான ரிவ்யூ இல்லை. கோப்ரா படம் சரியா போகல.. முதல் ஷோ ரிவ்யூ பார்த்ததும் ஒரு மாதிரி இருக்கு. நேரா ஆஃபிஸ் போயாச்சு. நான் படத்துக்கு முன்னாடி 5 நாள் தூங்கல.. நான் ஆஃபிஸ்ல கதவ சாத்திட்டு படுத்தேன். ஆனா தூக்கம் வரல. ஏன் என்னனு யோசிச்சிட்டு இருந்தேன். அதுக்கப்பறம் அரை மணி நேரத்துல கதவ தட்டறாங்க.. என்னனு பாத்தா அருள்நிதி.
அந்த நேரத்தில் உடனே என்னைத் தேடி வந்தார் அருள்நிதி சார், “தூக்கிப்போடு, அடுத்த படம் பண்ணலாம்” என்றார். இப்படி ஒரு தோள் கிடைக்க ஆசீர்வாதம் வேண்டும். இப்போது வரை உடன் நிற்கிறார். ஓடணும்ங்கறது நம்ம வளர்ப்புல இருக்கலாம் ஆனா தூக்கி விட கை வேணும். அது உடனே அவர்கிட்ட இருந்து வந்துச்சு. ரொம்ப பெரிய நன்றி. முதல் நாள்ல இருந்து பட பிஸ்னஸ் வரை அவர் எல்லாத்தையும் பண்ணி இருக்காரு. இந்த மாதிரி பந்தம் இருக்கும்போது நாம அவ்வளவு சீக்கிரம் விழுந்துட முடியாது அவருக்கு என் நன்றிகள். எனக்கு உடன் இருந்த உழைத்த என் குழுவினருக்கு நன்றிகள்" எனப் பேசியுள்ளார்.
டிமான்டி காலனி 2
முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், பிக்பாஸ் புகழ் அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார். ஹாரர் த்ரில்லர் ஜானரிலான இந்தத் திரைப்படத்தை ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் விஜய் சுப்பிரமணியன், R ராஜ்குமார் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் இப்படத்தை வழங்குகிறார்.