அழகு பற்றிய நமது வரையறைகளை பெரும்பாலும் திரைத்துறையே தீர்மாணிக்கிறது. ஒல்லியாக இருப்பது தான் அழகு , சப்பியாக இருப்பது தான் அழகு என ஒவ்வொரு காலத்திற்கும் இந்த வரையறைகள் மாறிக் கொண்டே இருப்பவை. இதனால் பல நடிகைகள் தங்கள் தோற்றத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி வருகிறார்கள். இன்னும் சில இந்த வரையறைக்கு கட்டுப்படாமல் தங்கள் இயல்பான அழகுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். அந்த வகையில் தி பீப்பல் மேகசின் மிகவும் எடுத்துக்காட்டான ஒரு முயற்சியை எடுத்துள்ளது. உலகின் அழகான பெண்ணாக 62 வயது ஹாலிவுட் நடிகையை தேர்வு செய்துள்ளது
உலகின் அழகான பெண் 2025
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி The People Magazine 2025 ஆம் ஆண்டின் அழகான பெண்ணை அறிவித்தது. அந்த வகையில் 62 வயதான பிரபல ஹாலிவுட் நடிகை டெமி மூர் இந்த பட்டத்தை வென்றுள்ளார். இதுவரை இந்த பட்டத்தை வென்ற மூத்த நடிகை இவர் என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த ஆண்டு வெளியாகி ஆஸ்கருக்கு தேர்வான தி சப்ஸ்டென்ஸ் திரைப்படத்தில் இவரது நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது. இந்த பட்டத்தை வென்றதை குறித்து டெமி மூர் கூறுகையில் இப்படி கூறினார்
என் உடலை வருத்தியிருக்கிறேன்
" என் உடலின் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. சில சமயங்களில் வயதாவதைப் பார்த்து நான் வருத்தப்படுவேன் தான். ஆனால் இன்று என் உடல் என்னுடைய மதிப்பை தீர்மானிக்காது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். இளமை காலத்தில் என் உடல் அழகாக இருக்க வேண்டும் என்று அதை நான் நிறைய வருத்தியிருக்கிறேன். இன்று என் உடலுடன் எனக்கு இன்னும் நெருக்கமான ஒரு உறவு ஏற்பட்டிருக்கிறது. இன்று நான் என் உடலின் தேவைகளை புரிந்துகொண்டு நடந்துகொள்கிறேன். என் அழகைப் பற்றிய பயம் எனக்கு இல்லை" என அவர் கூறியுள்ளார்.