மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் ஒன்று காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான நிலையில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது. இதனால் இரண்டாம் பாகம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்ப பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபாலா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஜெயசித்ரா, பிரகாஷ்ராஜ் என பலரும் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
கலவையான விமர்சனங்களுடன் கூடிய பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் வசூலில் இதுவரை ரூ.300 கோடியை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில், படத்தில் இடம்பெற்ற “வீர ராஜ வீரா” பாடல் காப்பி அடிக்கப்பட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ளது. சங்கர் மகாதேவன், கே.எஸ்.சித்ரா, ஹரிணி உள்ளிட்டோர் பாடிய இந்த பாடலின் வரிகளை இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருந்தார். பாடலாகவும்,காட்சியாகவும் ரசிகர்களை கவர்ந்த இப்பாடல் தன்னுடைய முன்னோர்களின் பாடலிலிருந்து எடுக்கப்பட்டதாக டெல்லியைச் சேர்ந்த ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் உஸ்தாத் வசிஃபுதின் தாகர் என்பவர் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த பாடல் தாகர் சகோதரர்கள் அதன ராகத்தில் உருவாக்கியதாகவும், 1978 ஆம் ஆண்டு ஹாலந்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் அந்த பாடல்கள் தாகர் சகோதரர்கள் பாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே தன்னுடைய அனுமதி பெறாமல் பொன்னியின் செல்வன் படத்தில் அப்பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். இது திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் மீதான குற்றம் சாட்டுக்கு மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சட்டக்குழு பதிலளித்துள்ளது. அதன்படி, “ ‘வீரா ராஜ வீர பாடல் 13 ஆம் நூற்றாண்டில் நாராயண பண்டிதசாரியால் இயற்றப்பட்ட இசையை தழுவியது என்றும், இது அனைவருக்கும் பொதுவானது’ எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பாரம்பரிய தகர்வணி த்ருபத் இசையில் இப்பாடல் இயற்றப்பட்டதாக படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பர, லாப நோக்கத்திற்காக உஸ்தாத் வசிஃபுதின் தாகர் பொன்னியின் செல்வன் படக்குழு மீதும், ரஹ்மான் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.