டெல்லியைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளரும், பாடகருமான ஷீல் சாகரின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


துரத்தும் சோகம்


சமீபகாலமாக திரையுலக சார்ந்த பிரபலங்களின் தொடர் மரணங்கள் அந்த துறைக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. கொரோனா தொற்றால் பல பிரபலங்கள் மரணமடைய, தற்போது மாரடைப்பு உட்பட பல காரணங்களால் அடுத்தடுத்து திரைத்துறையில் மரண நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகிறது. 


அந்த வகையில் இந்தாண்டில் மட்டும் பாலிவுட்டில் பிப்ரவரி 6 ஆம் தேதி பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் தனது 93வது வயதிலும், 15 ஆம் தேதி பாடகரும் இசையமைப்பாளருமான பப்பி லஹிரி தனது 69வது வயதிலும் மும்பையில் காலமாகினர். அதனைத் தொடர்ந்து கடந்த மே 29 ஆம் தேதி 28 வயது இளம் பஞ்சாபி பாடகரான சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 


இந்த அதிர்ச்சி சம்பவம் மறைவதற்குள் பன்முக மொழிகளில் சிறந்த பாடகராக வலம் வந்த கே.கே. எனப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மே 31 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனிடையே நேற்று (ஜூன் 2) பிரபல சந்தூர் இசைக்கலைஞர் பஜன் சோபோரி உடல் நலக்குறைவால் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டது. 


ஷீல் சாகர்


இப்படி அடுத்தடுத்த மரணங்கள் ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் டெல்லியைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளரும், பாடகருமான ஷீல் சாகர் ஜூன் 1 ஆம் தேதி மரணமடைந்துள்ளதாக அவரது நண்பர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 22 வயதாகும் ஷீல் சாகர் கடந்தாண்டு டெல்லியில் நடைபெற்ற இண்டிபென்டண்ட்  இசை விழாவில் “If I Tried” என்ற பாடல் மூலம் பிரபலமானார்.


 






இந்த பாடல் Spotify செயலியில் மட்டும் 40 ஆயிரம் ஸ்டிரீம்களை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து “Before It Goes”, “Still” and “Mr. Mobile Man – Live” போன்ற பாடல்களை அவர் வெளியிட்டார். பாடகர் மட்டுமல்லாமல் பியானோ, கிட்டார், சாக்ஸ்போன் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதிலும் ஷீல் சாகர் திறமை வாய்ந்தவர். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஷீல் சாகரின் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.