காவல்துறையில் டாப் ரேங்கில் இருக்கும் போலீஸ் ஆஃபிஸர்கள் மர்ம கும்பல் ஒன்றால் கொல்லப்படுகிறார்கள். அதில் கமல்ஹாசனுக்கும் ஒரு இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கொலை செய்த கும்பலை கண்டுபிடிக்க, எந்த விதிமுறைகளுக்கும் உட்படாத ஃபகத் ஃபாசில் தலைமையிலான அணி களம் இறங்குகிறது. இந்த அணி அந்த கும்பலை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளும், அதில் வெளியாகும் சஸ்பெஸ்ன்களும்தான் விக்ரம் படத்தின் கதை




கமல்ஹாசனுக்கு இந்தப்படம் நிச்சயம் ஒரு கம் பேக். பேரனுக்காக பிரயர்த்தனப்படும் காட்சிகளில் குழந்தையாகவே மாறும் கமல், ஆக்சன் காட்சிகளில் அதகளப்படுத்தியிருக்கிறார். தமிழில் வேலைக்காரனுக்கு பிறகு ஃபகத் ஃபாசிலுக்கு மிகச் சரியான படமாக விக்ரம் அமைந்திருக்கிறது. முதல் பாதியில் வரும் அனைத்து முடிச்சுகள் அனைத்தையுமே ஃபகத் ஃபாசிலின் அமர் கதாபாத்திரம்தான் அறிமுகப்படுத்துகிறது.




போலீஸ் அதிகாரியாக பல இடங்களில் தனக்கான முத்திரையை பதித்த ஃபகத், சென்டிமெண்ட் காட்சிகளில் கண்கலங்க வைத்து விடுகிறார். விஜய் சேதுபதிக்கு இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமான ரோல். இரக்கமே இல்லாத தோரணை, உக்கிரத்தை காட்டும் தங்கப்பல், தனக்கே உரித்தான பாடிலாங்குவேஜ் போன்றவை அவரை தனித்து காடியிருக்கிறது. அந்த மெனக்கெடலுக்கு பாராட்டுகள்.


லோகேஷ் கனகராஜ் கைதிக்கு பிறகு தனது 100 சதவீத படமாக விக்ரம் இருக்கும் என கூறியிருந்தார். அவர் சொன்ன படியே அவருக்கு உரித்தான பாணியில் இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்.




அதற்கு சான்று படம் முடித்து வெளியே வரும் போது படத்தின் நட்சத்திரங்கள் மனதில் நிற்காமல் கதாபாத்திரங்கள் நிற்பது. லோகேஷ் கனகராஜின் திரைக்கதைதான் ஒட்டுமொத்த படத்தின் முதுகெலும்பு. ஒரு காட்சியையும் இன்னொரு காட்சியையும் அவர் கனக்ட் செய்திருக்கும் விதமாகட்டும், சின்ன கதாபாத்திரமோ, பெரிய கதாபாத்திரமோ அவர்களுக்கான ஸ்பேஸை கொடுத்த விதமாகட்டும், ஆக்சன் என்ற பேரில் சகட்டுமேனிக்கு ஏதோ செய்யாமல், ஆடியன்ஸின் பல்சை பிடித்து அதை கையாண்ட விதமாகட்டும் எல்லாவற்றிலுமே லோகேஷின் முத்திரை. கஞ்சா, பிரியாணி, துப்பாக்கிகள் என எங்கு பார்த்தாலும் லோகேஷினியாவாகத்தான் இருக்கிறது. இறுதியில் சூர்யாவை களமிறக்கி விக்ரமை கைதியோடு கன்க்ட் செய்த விதம் அற்புதம்.


அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு சரியாக பொருந்தி இருந்தாலும், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாமொ என்று தோண வைக்கிறது. பெரிய குறை இல்லை என்றாலும், சரசரவென படம் ஓடும் வேகம் ரசிகர்களை இழுத்துப் பிடிக்கிறது. இவ்வளவு வேகம் இல்லாமல் கொஞ்சம் மூச்சுவிட நேரம் கொடுத்திருக்கலாம் என்பதும் ரசிகர்களின் கமெண்டாக இருக்கிறது.


கிரீஷ் கங்காதரணி ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு பலம். ஆகமொத்தத்தில் கொடுத்த பில்டப்புகளுக்கெல்லாம் சரியான கிடா விருந்தாக அமைந்திருக்கிறது விக்ரம்.