மனநலபிரச்னை சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகை தீபிகா படுகோன் தமிழகத்திற்கு வந்திருக்கிறார். 


கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனநோயால் பாதிக்கப்பட்ட நடிகை தீபிகா படுகோன் அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு வந்தார். அந்த சம்பவம் அவரை கடுமையாக பாதித்துவிட,  “Live, Love, Laugh” என்ற அறக்கட்டளையை தொடங்கி, தொடர்ந்து மனநலம் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை பல இடங்களில் முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதியான திங்கள் கிழமை கடைபிடிக்கப்பட்ட உலக மனநல தினத்தன்று, அவர் தமிழகத்தில் உள்ள திருவள்ளூருக்கு வந்துள்ளார். 


 






இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் தீபிகா படுகோன்,  “மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையையும், அவர்களைப் பராமரிப்பவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகளில் தொடக்கத்தில் இருந்தே நாங்கள் இடைவிடாமல் இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் நாங்கள் இதை செய்வதற்கு காரணம் இருக்கிறது என்று பேசிய அவர் மனநல பிரச்னை யாருக்கும் வரலாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.  


இதுமட்டுமல்லாமல் மனநோய் பாகுபாடு காட்டாது என்று பேசியிருக்கும் அவர் நாங்கள் சொல்ல வருவதை, அவர்களை கேட்க வைப்பதே நாங்கள் அடைய நினைக்கும் இலக்கு என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.  அத்துடன் மனநோயைப் பற்றிய அவர்களின் புரிதல் எவ்வாறு உருவாகியுள்ளது என்பதைப் பற்றி சமூகம் பேசுவதை இதில் மகிழ்ச்சியான பகுதியாக கருதுகிறேன என்று கூறியிருக்கும் அவர், எனக்கு இது மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது என்றும் நான் நன்றியுடையவளாக உணர்கிறேன் என்றும் அதே நேரம் இன்னும் நாங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதையும் உணர்வதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். 


 


முன்னதாக மனநோய் பற்றி தீபிகா படுகோன் பேசியது 


கோன் பனேகா க்ரோர்பதி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். அதில் பேசிய தீபிகா, "2014 ஆம் ஆண்டு தான் எனக்கு மனநல பாதிப்பு இருப்பதை அறிந்து கொண்டேன். அப்போது நான் மும்பையில் இருந்தேன். என்னைப் பார்க்க எனது பெற்றோர் பெங்களூருவில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் திரும்பிக் கிளம்பும்போது  அழுதேன். எனது அழுகை வித்தியாசமாக இருப்பதாக அம்மா கூறினார். நான் அப்படி அழுது பார்த்தது இல்லை என்று கூறிய அவர் நல்ல மனநல மருத்துவரைப் பார்க்கச் சொன்னார். நான் அம்மா சொன்னதைத் தயங்காமல் செய்தேன்.


சில மாதங்களுக்குப் பின்னர் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்தேன். மன நலம் பொறுத்தவரை ஒருமுறை நீங்கள் குணமாகிவிட்டால் அதை மறந்துவிடக் கூடாது. ஆகையால் தான்  என் வாழ்க்கை முறையில் சிற்சில மாற்றங்களைச் செய்து கொண்டேன். அதனால், என்னால் இப்போது இயல்பாக இருக்க முடிகிறது. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்ட காலகட்டம் மிகவும் மோசமானது. எனக்கு வெளியில் செல்ல பிடிக்கவில்லை. எந்த வேலையிலும் நாட்டமில்லை. யாரையும் சந்திக்கவும் விரும்பவில்லை. ஏன், வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்று தோன்றியது. ஆனால்  சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்து மீண்டுவிட்டேன். அதன் பின்னர் தான் மன பாதிப்புகள் மீது உள்ள சமூக புறக்கணிப்பை தகர்க்கும் வகையில் ஓர் அமைப்பை உண்டாக்கி செயல்பட்டு வருகிறேன்.


நாம் மற்ற நோய்களுக்கு சிகிச்சை எடுக்கத் தயங்குவதில்லை. ஆனால், மனநல சிகிச்சை பற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை. அதனால், 2015ல் தொடங்கப்பட்ட அமைப்பு தான் லிவ் லவ் லாஃப் அமைப்பு ( Live Love Laugh Foundation). எனக்கு இப்படி ஒரு மன அழுத்த நோய் ஏற்பட்டால், அதுபோல் மற்றவர்களும் பாதிக்கப்படக் கூடும் என்பதை உணர்ந்தேன். என் வாழ்வில் ஒரே ஒருவரையாவது மன அழுத்தத்தில் இருந்து மீட்க முடியும் என்றால் அது மிகப்பெரிய பாக்கியம் என நினைக்கிறேன். இப்போது மன நோய்களுக்கு எதிரான சமூக புறக்கணிப்பை விலக்கும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்கிறேன்." என்று தீபிகா குறிப்பிட்டு இருந்தார்.