`கெஹ்ரய்யான்’ படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் முழு பிஸியாக இருக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அவரும் அவரது கணவர் ரன்வீர் சிங்கும் இருவரும் ஒன்றாக இல்லாத திரைப்படங்களாக இருந்த போதும், ஒன்றாகப் பணியாற்ற வழிமுறைகளை உருவாக்குவது குறித்து கூறியுள்ளார். சமீபத்தில் நடிகை தீபிகா படுகோனேவின் பிறந்தநாளின் போது, அவரது கணவரும் பாலிவுட் நடிகருமான ரன்வீர் சிங், தீபிகா படுகோனேவின் ஸ்பெஷலான படம் ஒன்றைப் பகிர்ந்து, அதில் `கெஹ்ரய்யான்’ படத்தையும் விளம்பரப்படுத்தி இருந்தார். இதுகுறித்து பேசிய நடிகை தீபிகா படுகோனே, அவருக்கும் அவரது கணவர் ரன்வீர் சிங்கிற்கும் `பத்மாவத்’ படம் முடிந்து சில காலம் கழிந்த பிறகே, இருவரும் ஒன்றாக இல்லாத திரைப்படங்களிலும் இருவரும் பணியாற்ற வேண்டியதாக வரும் என்பது புரிய வந்ததாகத் தெரிவித்துள்ளார். 



தொடர்ந்து பேசிய நடிகை தீபிகா படுகோனே, `ரன்வீர் சிங் என்னுடைய பணிகளுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார். நாங்கள் இருவரும் முதலில் சந்தித்த போது, நாங்கள் ஒன்றாகவே திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். `பத்மாவத்’ திரைப்படம் வெளியான பிறகு, அவர் நடித்த முதல் திரைப்படம், `கல்லி பாய்’. இது எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. `இப்போது நீ ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாய்; அதில் நான் இல்லை’ என நினைத்தேன். தொடர்ந்து, அவர் இல்லாத எனது படம் ஒன்று வெளியானது. அதன்பிறகு, நாங்கள் இருவரும் ஒரே படத்தில் நடித்து பழக்கம் கொண்டவர்கள் என்பதால் இந்த எண்ணங்களில் இருந்து வெளிவருவதற்கு சில காலம் எடுத்தது. இந்த எண்ணத்தில் இருந்து எங்களை விலக்கிக் கொண்டு, நடிகர்களாக நாங்கள் வெவ்வேறு திரைப்படங்களில் பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டோம்’ என்று கூறியுள்ளார். 






`கெஹ்ரய்யான்’ படத்தின் ட்ரைலர் வெளியான போது, ரன்வீர் சிங் தனது மனைவி தீபிகாவைப் பாராட்டி, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். மேலும், அவரையும், `கெஹ்ரய்யான்’ படக்குழுவினரையும் அவர் பாராட்டினார். இது மட்டுமின்றி, தீபிகா நடித்த `சபக்’ திரைப்படம் வெளியான போதும், வெளிப்படையாக பாராட்டியிருந்தார் ரன்வீர் சிங். தீபிகா படுகோனேவும் ரன்வீர் சிங்கின் திரைப்படங்களைப் பாராட்டியதோடு, 2018ஆம் ஆண்டு `சிம்பா’ திரைப்படம் வெளியான போது, தன் கணவரை மகிழ்விக்க ஜாலியாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார் தீபிகா படுகோனே. 



வரும் பிப்ரவரி 11 அன்று, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது `கெஹ்ரய்யான்’ திரைப்படம். இதில் தீபிகா படுகோனே, அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை ஷகுன் பத்ரா இயக்கியுள்ளார்; கரன் ஜோஹர் தயாரித்துள்ளார்.