நடிகை தீபிகா படுகோனுக்கு இதயத்துடிப்பு அதிகமானதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த செய்தியில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பாலிவுட் பிரபல நடிகையான தீபிகா படுகோன் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும்  புராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் பிரபாஸூம், அமிதாப்பச்சனும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் முக்கியமான காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்த போது தீபிகா படுகோனுக்கு திடிரென்று இதயத்துடிப்பு அதிகமானதாகவும், அதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.






இந்த செய்தியை மறுத்த படக்குழு அந்த செய்தியில் உண்மை இல்லை என்று கூறி விளக்கம் அளித்தது. இந்த நிலையில் படக்குழு சார்பில் டிடி நெக்ஸ்ட் இதழுக்கு கொடுத்த விளக்கத்தின் படி, “ வார இறுதியில் தீபிகா மருத்துவமனை சென்றது உண்மைதான். ஹைதராபாத்தில் நீண்ட நேரம் படப்பிடிப்பு நடந்த நிலையில் அவர் மருத்துமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்துகொண்டார். ஆனால் அது சாதரண ஜெனரல் செக்-அப்தான்.


அடுத்ததாக தீபிகா படுகோன் ஹிருத்திக் ரோஷன் இணைந்து நடிக்கும் படத்தில் கடுமையான மார்ஷியல் ஆர்ட் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்காக தனது உடற்பயிற்சி மற்றும் டயட் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெறவும் அவர் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். மற்றபடி அவருக்கு இதயதுடிப்பு அதிகமானது, வலி ஏற்பட்டது போன்ற தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை” என்று கூறியுள்ளது.