பிரபாஸின் கலகி2898 இரண்டாம் பாகத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோன் நடிக்கப்போவதில்லை என பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக ஸ்பிரிட் தற்போது கல்கி என அடுத்தடுத்து இரு பிரபாஸ் படங்களில் இருந்து தீபிகா விலகியதால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கல்கி 2 படத்தில் இருந்து விலகிய தீபிகா படுகோன் ஷாருக் கானின் கிங் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கல்கி 2 படத்திலிருந்து தீபிகா விலகியது ஏன் ?
பிரபாஸ் நடித்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிவந்த ஸ்பிரிட் படத்தில் இருந்து முதலில் தீபிகா படுகோன் விலகினார். இந்த படத்திற்காக அவர் ரூ 20 கோடி சம்பளம் கேட்டதாகவும் மேலும் வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க சொன்னதாகவும், தெலுங்கில் வசனங்கள் பேச மறுத்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அடுத்தபடியாக போதுமான ஒத்துழைப்பு இல்லாததால் தீபிகா படுகோன் கல்கி 2 படத்தில் நடிக்கவில்லை என வைஜயந்தி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
கல்கி2898 முதல் பாகத்தை விட 25 சதவீதம் அதிகம் சம்பளம் கேட்டதாகவும். பணி நேரத்தை 7 மணி நேரமாக குறைக்கவும் மேலும் 25 பேர்கொண்ட தன்னுடைய குழுவுக்கும் சேர்த்து 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க இடம் கேட்டதாகவும் இந்த செலவுகளை சுமக்க விரும்பாத தயாரிப்பு நிறுவனம் அவரை படத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. தொடர்ச்சியாக அடுத்தடுத்து பிரபாஸின் இரு படங்களில் இருந்து தீபிகா விலகியதால் பிரபாஸ் ரசிகர்கள் தீபிகா படுகோனை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.
ஷாருக் கான் கிங் படத்தில் தீபிகா படுகோன்
தீபிகா படுகோன் தனது வேலை நேரத்தை குறைக்க சொல்வது நியாயமான கோரிக்கை தான் என பலர் அவருக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார்கள். ஆனால் சமூக வலைதளங்களில் தீபிகாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறிப்பிட்டு அவரை பலர் விமர்சித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் தன்னை விமர்சிப்பவர்களின் வாயை ஒரே பதிவில் மொத்தமாக அடைத்துள்ளார் தீபிகா படுகோன் . பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட ஷாருக் கானின் கிங் படத்தில் தீபிகா நாயகியாக நடிக்க இருப்பதே அந்த தகவல். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபிகா ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் அவர் " 18 வருடங்களுக்கு முன்பு ஓம் சாந்தி ஓம் படப்பிடிப்பின் போது அவர் எனக்குக் கற்றுக் கொடுத்த முதல் பாடம் என்னவென்றால், ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அனுபவமும், அதில் நீங்கள் யாருடன் நடிக்கிறீர்களோ, அவர்களுடன் நடிக்கும் நபர்களும் அதன் வெற்றியை விட மிக முக்கியம். அன்றிலிருந்து நான் எடுத்த ஒவ்வொரு முடிவிலும் அந்தக் கற்றலைப் பயன்படுத்தியிருக்கிறேன். அதனால்தான் நாங்கள் எங்கள் 6 வது படத்தை மீண்டும் ஒன்றாக உருவாக்குகிறோம்?" என அவர் பதிவிட்டுள்ளார்.
ஷாருக் கானின் கிங் படத்தில் நடிப்பதையே அவர் இப்படி மறைமுகமாக சுட்டிகாட்டியுள்ளார் என ரசிகர்கள் கூறுகிறார்கள். கூடிய விரைவில் ஷாருக் கான் தீபிகா இணைந்து நடிக்கும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.