22வது உலகக்கோப்பை போட்டி கத்தாரில் லூசைல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கால்பந்து விளையாட்டின் மிரட்டல் நாயகன் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினாவும், நடப்புச் சாம்பியன் பிரான்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பரபரப்புக்கு கொஞ்சமும் குறைவின்றி கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், பெனால்டி ஷுட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் மூன்றாவது முறையாக, 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அதகளப்படுத்தியதுடன், 8 கோல் அடித்து கோல்டன் பூட்டை கைப்பற்றினார் பிரான்சு வீரர் எம்பாப்வே. ஒட்டு மொத்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதற்காக மெஸ்ஸிக்கு கோல்டன் பந்து விருதும், சிறப்பான பங்களிப்பால் தனது அணியை வெற்றிபெறச் செய்ய கோல்களைத் தடுத்த அர்ஜெண்டினாவின் கோல் கீப்பர் மார்டினஸ்க்கு கோல்டன் கிளவ் விருதும் வழங்கப்பட்டது.
உலகக்கோப்பையை அறிமுகப்படுத்திய தீபிகா படுகோனே:
முன்னதாக உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு வழங்குவதற்கான கோப்பையை, இந்திய நடிகை தீபிகா படுகோனே மற்றும் ஸ்பெயின் அணியின் முன்னாள் கோல் கீப்பர் ஐகர் கேசிலாஸ் ஆகியோர் சேர்ந்து நேற்ரு மைதானத்திற்கு கொண்டு வந்தனர். இந்தியர் ஒருவர் ஃபிபா உலகக்கோப்பையை மைதானத்தில் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையகும்.
தீபிகா பெருமிதம்:
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் தீபிகா படுகோனே வெளியிட்டுள்ள பதிவில், ஃபிபா உலகக்கோப்பையை அறிமுகப்படுத்தியதோடு, விளையாட்டு உலக வரலாற்றில் சிறப்பான ஒரு ஆட்டத்தை பார்த்தேன், இதைவிட வேறு என்ன கேட்க முடியும் என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குள்ளான தீபிகாவின் உடை:
இதனிடையே, கோப்பையை அறிமுகப்படுத்தும் போது தீபிகா அணிந்து வந்த உடை தொடர்பாக, நெட்டிசன்கள் பலரும் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் பங்கேற்கும்போது, ஏன் எதோ பையை போன்ற ஒரு உடையை அணிந்து வந்தீர்கள் என தீபிகா படுகோனேவை நோக்கில் கேள்வி எழுப்பியுள்ளனர். அண்மையில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பதான் படத்திலிருந்து வெளியான பாடலில், தீபிகா படுகோனே அணிந்திருந்த ஆடையும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.