தீபிகா படுகோன்


பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone). பேட்மிட்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகளான தீபிகா, முதலில் ஒரு பேட்மிட்டன் வீராங்கனையாக இருந்தவர். மாடலிங் மீதிருந்த  ஆர்வத்தால் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் செய்து வந்தார்.


அதன் மூலம் 2006ஆம் ஆண்டு அவருக்கு 'ஐஸ்வர்யா' என்ற கன்னட திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு பாலிவுட்டில் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு, இன்று உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக கொண்டாடப்பட்டு வருகிறார். 


'ஓம் சாந்தி ஓம்' திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் தீபிகா படுகோன். முதல் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக இணைந்த தீபிகா படுகோனுக்கு அப்படம் நல்ல ஓர் வரவேற்பை பெற்றுத் தந்தது. இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை தட்டிச்சென்றார். ஷாருக்கான் - தீபிகா படுகோன் ஜோடி இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூ இயர், பதான், ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்கள் காம்போ பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் என்றே சொல்ல வேண்டும். மேலும் ரன்பீர் கபூருடன் தமாஷா, ஏ ஜவானி ஹே தீவானி, காக்டெயில், பிகு , உள்ளிட்டப் படங்களில் தனித்துவமான  நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.


தீபிகாவை அடையாளம் தெரியாத பெண்


லண்டனில் உள்ள சவுத்பேங்க் சென்டரில் உள்ள ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் நடைபெற்ற 77வது BAFTA விருது வழங்கும் விழாவில் நடிகை தீபிகா படுகோன் இன்று கலந்துகொண்டார். இந்த விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியல் கடந்த ஜனவரி 18ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பிரபல ஹாலிவுட் நடிகர்களுடனும் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வரைலாகின. இந்தப் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட வெளி நாட்டுப் பெண் ஒருவர் ”இந்த பெண் யார் என்று தெரியவில்லை, ஆனால் அவள் அணிந்திருக்கும் உடை சிறப்பாக இருக்கிறது “ என்று பதிவிட்டுள்ளார். 






இதனைப் பார்த்த தீபிகா படுகோன் ரசிகர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகி அந்தப் பெண்ணுக்கு பதில் அளித்து வருகிறார்கள். இந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவர் என்று ஒருவர் அந்தப் பெண்ணின் பதிவில் கமெண்ட் செய்தார். இந்தியாவின் மிகப்பெரிய பெண் சூப்பர்ஸ்டார் என்று மற்றொருவர் தீபிகாவை அடையாளப்படுத்தியுள்ளார். வெளிநாட்டுப் பெண்ணின் கேள்வியால் கடுப்பான பாலிவுட் உலகம் தற்போது தீபிகாவை ட்ரெண்ட் செய்து இணையத்தில் அவரது அருமை பெருமைகளைப் பேசி வருகிறது.