கொரோனா காலகட்டத்தின் போது அனைத்து துறையினரும் ஏராளமான வகைகளில் பொருளாதார இழப்புகளை சந்தித்தனர். அதிலும் திரைத்துறை பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்தது. அந்த பேரிடர் காலகட்டத்தில் இருந்து மீண்டு 2022ம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக தலைதூக்கியது திரைத்துறை. கடந்த ஆண்டு பல நல்ல திரைப்படங்கள் வெளியான நிலையில் 2023ம் ஆண்டு துவங்கியது முதல் திரைத்துறைக்கு சிறப்பான ஒரு பொற்காலமாகவே இருந்து வருகிறது. ஏராளமான வெற்றி படங்கள், பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் என பல சாதனைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது. 


அந்த வகையில் 2023ம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுக இயக்குநர்களாக அடியெடுத்து வைத்த எக்கச்சக்கமான இயக்குநர்களின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தாண்டிலும் அமோக வெற்றியை பெற்று தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றுள்ளனர். அப்படி 2023ம் ஆண்டு அறிமுகமான இயக்குநர்களின் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் :


 



அயோத்தி :  


தமிழ் சினிமா இதுவரையில் காணாத ஒரு அற்புதமான ஆழமான திரைக்கதையை கொண்ட ஒரு படம் தான் அயோத்தி. இப்படத்தை அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கி இருந்தார். மொழி தெரியாத ஒரு ஊருக்கு  வந்து இறந்து போன பெண்ணின் உடலை அவளின் குடும்பத்தினரின் விருப்பப்படி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க படாதபாடு பட்டு உதவும் ஒரு மனிதனின் கதை. மனிதத்தையும் சகோதரத்துவத்தையும் முன்னிறுத்திய எமோஷனலான இப்படத்தின் கதை பல நாட்களுக்கு அதன் தாக்கத்தை மனதில் நிலைநிறுத்தியது. 


டாடா :


அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம். பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் ஒரு இளைஞன் தனது காதலியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப் மூலம் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்ள, பொருளாதார நெருக்கடியால் காதலர்கள் பிரிய ஒரு பொறுப்பான அப்பாவாக கவின் எப்படி குழந்தையை வளர்க்கிறார் என்ற கதைக்களத்தை மிகவும் நாசுக்காக மனிதனின் மாற்றத்தை உணர்த்திய ஒரு படம். 


 



குட் நைட் :


குறட்டையை மையமாக வைத்து ஒரு உணர்வு பூர்வமான ஒரு கதையை மிக அழகாக கலகலப்பூட்டும் காமெடி டிராமாவாக 'குட் நைட்'  படத்தை கொடுத்து இருந்தார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். ஸ்மால் பட்ஜெட் படமாக இருந்தாலும் ஃபீல் குட் படமாக ரசிகர்களை கவர்ந்தது. 


போர் தொழில் :


நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழு நீள கிரைம் திரில்லர் திரைப்படத்தை கொடுத்து இருந்தார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா. படத்தின் ஆரம்பம் முதல் எண்டு வரை பரபரப்பான திரைக்கதையை ஒரு கோர்வையாக மிக அழகாக அமைத்து இருந்தார் இயக்குநர். இது அவருக்கு முதல் படம் என்ற பிம்பம் சிறிதும் இல்லாமல் ஒவ்வொரு காட்சியையும் நேர்த்தியாக அமைத்து ஒரு த்ரில்லர் நாவலை முழுமையாக படித்து முடித்த ஃபீல் கொடுத்து இருந்தார். 


ஜோ :


அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் , மாளவிகா மனோஜ், பாவ்யா த்ரிகா அன்புதாசன் நடிப்பில் சுட சுட காதலர்களை டார்கெட் செய்து வெளியாகியுள்ள 'ஜோ' திரைப்படம் பழைய கதை தான் என்றாலும் உணர்ச்சிபூர்வமான அந்த கதைக்குள் ரசிகர்களை பயணிக்க வைத்து ரசிகர்களை (காதலர்களை) கவர்ந்தது. 


 



குய்கோ :


டி. அருள் செழியன் இயக்கத்தில் விதார்த், யோகி பாபு, இளவரசு, முத்துக்குமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் நடிப்பில் வெளியான இப்படம் நகைச்சுவை கலந்த யதார்த்தமான கதை. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 


முதல் படத்திலேயே அசால்ட் செய்த இந்த இயக்குநர்களின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.