சந்தானம் நடிப்பில் மூன்றாவது முறையாக உருவாகி இருக்கும் ஹாரர் காமெடி திரைப்படம் ‘டிடி ரிடர்ன்ஸ்’. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், படம் குறித்தான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் நடிகர் சந்தானம்.


தேர்ந்தெடுத்த கதைகள்


திரைப்படங்களின் பெயர் பட்டியலில் இவர்களுடன் சந்தானம் என்கிற நிலை மாறி தற்போது சந்தானத்துடன் இந்த நடிகர்கள் நடித்துள்ளார்கள் என்கிற நிலையை சந்தானம் எட்டியிருக்கிறார். இது குறித்து சந்தானம் அளித்த பதிலைப் பார்க்கலாம்!


“ நீங்கள் கேட்டிருப்பது மிகப்பெரிய ஒரு கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் இடத்தில் தற்போது நான் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் அந்தத் தகுதியை அடைவதற்கான உழைப்பை நான் செலுத்திக்கொண்டு தான் இருக்கிறேன். தொடர்ச்சியாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். இன்னும் சில நல்ல வெற்றிப் படங்களை கொடுத்த பின் நான் மற்ற பெரிய நடிகர்களுக்கு நிகரான ஒரு இடத்திற்கு செல்வேன் என்று நம்புகிறேன்” என்றார்


டிடி ரிடர்ன்ஸ் குழந்தைகளுக்கான படம்


தொடார்ந்து டி. டி ரிடர்ன்ஸ் படம் குறித்து பேசிய சந்தானம் “முன்பு வெளியான தில்லுக்கு துட்டு இரண்டு பாகங்களும் ஹாரர் காமெடி வகையில் அமைந்தன. இந்தப் படங்கள் மக்களால் ரசிக்கப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு நல்ல வசூலைக் கொடுத்தன.


என்னுடைய சின்ன வயதில் இருந்தே எனக்கு பேய் பயத்தை ஊட்டி வளர்த்தார்கள். குழந்தைகளுக்கு பேய் பயத்தை சொல்லிச் சொல்லியே பெற்றோர்கள் அவர்களை வளர்க்கிறார்கள். இதன் காரணத்தினாலேயே நான் டிடி ரிடர்ன்ஸ் படம் குழந்தைகள் பயமில்லாமல் ரசித்து பார்க்கும் ஒரு படமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.


இதனை மனதில் வைத்தே ஒரு கேம் ஷோவை மையமாக வைத்து கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர். எல்லாரும் ஒரு படத்தை ப்ரோமோட் செய்ய ஒரு கேம் ஷோவில் கலந்துகொள்வார்கள் இல்லையா? ஒரு மாற்றத்திற்கு ஒரு கேம் ஷோவையே படமாக இந்தப் படத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என்றார்.


தொடர்ந்து மொட்டை ராஜேந்தர் பற்றிப் பேசிய சந்தானம் ”தில்லுக்கு துட்டு இரண்டு பாகத்திலும் மொட்ட ராஜேந்திரன் மற்றும் எனக்குமான காமெடி காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருந்தன. குறிப்பாக தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகத்தில் கதவைத் திறந்து திறந்து மூடும் காட்சி அனைவருக்கும் பிடித்திருந்தது. தற்போது டிடி ரிடர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற ஒரு காட்சிகூட இணையதளத்தில் பயங்கரமாக டிரண்டாகி இருக்கிறது.


இந்த மாதிரியான ஒரு ஹாரர் படத்தில் மொட்ட ராஜெந்திரன் செய்யும் முட்டாள் தனமான காமெடிகள் எப்போதும் நகைச்சுவையாக அமைவதே இந்த வெற்றிக் கூட்டணிக்கு காரணம் என்று நினைக்கிறேன்” என்றார்.


டிடி ரிடர்ன்ஸ்


சந்தானம், சுரபி, முனிஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முதலியவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கிறது டிடி ரிட்டர்ன்ஸ். பிரேம் ஆனந்த் இயக்கி ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். வரும் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.