தி ஃப்ளாஷ் டிரெய்லர்:
ஆண்டி முஷெட்டி இயக்கத்தில் எஸ்ரா மில்லர் நடிப்பில் உருவாகியுள்ள தி ஃப்ளாஷ் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் மைக்கல் கீட்டன் மற்றும் பென் அஃப்லெக் ஆகியோர் பேட் மேனாக நடிக்க, சூப்பர் கேர்ள் கதாபாத்திரமும் இடம்பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வரும் ஜுன் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
டிசி நிறுவனம்:
காமிக்ஸ் புத்தக விற்பனையில் முன்னோடியான டிசி நிறுவனம், திரைப்பட தயாரிப்பில் இன்னும் தனக்கான ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் உள்ளது. அதே நேரம், அதன் போட்டி நிறுவனமான மார்வெல் தனக்கென ஒரு பெரும் சாம்ராஜ்ஜியத்தையே கட்டி எழுப்பியுள்ளது. இந்நிலையில் தான், நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு டிசி நிறுவனத்தை கட்டமைக்கும் பொறுப்பை, இயக்குனர் ஜேம்ஸ் கன் கையில் எடுத்துள்ளார். இது டிசி நிறுவனத்திற்கும், அதன் ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. அதற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தான் தி ப்ளாஷ் திரைப்படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது.
தி ஃப்ளாஷ் டிரெய்லர்:
உலகின் மிகவும் வேகமான நபராக கருதப்படும் ஃப்ளாஷ் கதாபாத்திரம் டைம் டிராவல் செய்து, தனது அம்மா உயிருடன் இருக்கும் டைம் லைனிற்கு செல்கிறார். அவ்வாறு செல்லும் இடத்தில் அவர் மேற்கொள்ளும் ஒரு சிறிய மாற்றம், ஒட்டு மொத்த உலகத்தையே மாற்றி அமைக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்னைகளை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை மையப்படுத்தி தான், தி ஃப்ளாஷ் திரைப்படம் உருவாகியுள்ளது என்பதை டிரெய்லர் மூலம் அறியமுடிகிறது.
டிரெய்லர் சொல்வது என்ன?
வேறு ஒரு டைம் லைனிற்கு செல்வதன் அடிப்படையில் ஃப்ளாஷ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்ரா மில்லர் இரட்டை வேடத்தில் தோன்றுகிறார். பிரச்னையை தீர்க்க மற்ற சூப்பர் ஹீரோக்களின் உதவி அவசியம் என்பதை உணர்ந்து, பேட்மேனை தேடி செல்கிறார். அந்த வகையில் உண்மையான டைம் லைனில் பென் அஃப்லெக் பேட் மேன் கதாபாத்திரமும், மாற்றியமைக்கப்பட்ட டைம் லைனில் மைக்கல் கீட்டன் பேட் மேன் கதாபாத்திரமும் இடம்பெற்றுள்ளது. இதோடு, சூப்பர் கேர்ள் கதாபாத்திரமும், மேன் ஆஃப் ஸ்டீல் எனும் சூப்பர் மேன் படத்தில் தோன்றிய ஜாட் எனும் வில்லன் கதாபாத்திரமும், தி ஃப்ளாஷ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. பிரமாண்ட கிராபிக்ஸ் உடன் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக பேட்மேனின் ஐகானிக் வசனமான “im batman” நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.
ஃப்ளாஷ் ஏன் மிக முக்கிய திரைப்படம்:
பல்வேறு பிரச்னைகளுக்கு பின் தற்போது தான், டிசி நிறுவனத்தை ஒரு பெரிய சினிமாடிக் யூனிவர்ஸ் ஆக கட்டமடைக்க ஜேம்ஸ் கன் பணிகளை மேற்கொண்டுள்ளார். வரும் 2025ம் ஆண்டு முதல் அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஒரு கதைக்களத்தையும் அவர் வடிவமைத்துள்ளார். அதற்கான முதல் உந்துகோலாகவும், டிசி சினிமாக்களில் இதுவரை நடந்த அனைத்தையும் மாற்றி அமைக்கும் வகையில் தான் தி ஃப்ளாஷ் திரைப்படம் உருவாகியுள்ளது. எனவே, வரும் ஜுன் 16ம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படம், ஒட்டுமொத்த டிசி சினிமாடிக் யூனிவர்ஸிற்கே புதிய தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.