நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘தி க்ரே மேன்’(The Gray Man) திரைப்படத்தின் ட்ரெய்லரில் தனுஷ் சில நொடிகளே வந்து செல்வதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


ஹாலிவுட்டில் தனுஷ்:


பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸின் பிரமாண்ட தயாரிப்பாக ‘தி க்ரே மேன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிடி வார், எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா - வின்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் என்று அழைக்கப்படும் ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய இருவரும் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இப்படத்தில் ஹாலிவுட் பிரபலங்களான ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ் நடித்துள்ளனர். இவர்களுடன் தமிழ்,இந்தி,தெலுங்கு திரையுலகில் பிரபலமான தனுஷும் நடித்திருக்கிறார்.




தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம், மாறன் உள்ளிட்ட சமீபத்திய திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வசூல் அளவில் வெற்றிபெறாத நிலையில் இந்த படத்தினை அவரது ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருக்கின்றனர். தனுஷ் ஏற்கனவே *இந்திய அளவில் பிரபலமடைந்துவிட்டாலும் தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தார். தற்போது ஹாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குநரின் இயக்கத்தில் நடிப்பது அவரது ரசிகர்களை பெருமளவில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


வெளியான ‘தி க்ரே மேன் ட்ரைலர்’:


2.11 நிமிடங்கள் ஓடக்கூடிய தி க்ரே மேன் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரைலரில் வரும் ஒரு சண்டைக் காட்சியில் தனுஷ் சில நொடிகள் மட்டுமே வருகிறார். ஆர்வமுடன் பார்த்த தனுஷ் ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.  பெரும் இயக்குநர்கள், பெரும் நடிகர்கள் நடித்திருப்பதால் தனுஷ் ஓரம் கட்டப்பட்டாரா, ட்ரைலரில் சில நொடிகள் தான் வருகிறார் என்றால் சாதாரண கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளாரா தனுஷ்? என்ற ரீதியில் எழுதி வருகின்றனர். 



தனுஷைப் பாராட்டிய ரூசோ சகோதரர்கள்:


நேற்று இரவு ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய ரூசோ சகோதரர்கள், தனுஷ் பற்றி குறிப்பிடுகையில், தி க்ரே மேன் திரைப்படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறியுள்ளனர். படத்தில் 2 சிறந்த ஆக்‌ஷன் காட்சிகள் தனுஷுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், தாங்கள் தனுஷின் மிகப்பெரிய ரசிகர்கள் என்றும் அவருக்காகவே ஒரு கதாப்பாத்திரத்தை எழுதியதாகவும் கூறியுள்ளனர். மேலும், கேமராவின் முன் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டியுள்ள அவர்கள் தனுஷுக்கு அதிரடியான கதாப்பாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.






ஜூலை 22ல் வெளியாகும் இந்த படத்தில் தனுஷுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது திரைப்படம் வந்தால் தான் தெரியவரும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.