தமிழ் சினிமாவில் கலக்கிய முக்கிய வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி (Daniel Balaji) நேற்று இரவு திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். 48 வயதில் திடீரென இவர் உயிரிழந்தது திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வேட்டையாடு விளையாடு அமுதன்
இந்நிலையில் டேனியல் பாலாஜிக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் நேரிலும் இணையத்திலும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் டேனியல் பாலாஜிக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் நாயகனும், தமிழ் சினிமாவின் உச்ச நடிகருமான கமல்ஹாசன் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் இரங்கல்
“தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி” எனப் பதிவிட்டுள்ளார்.
‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் அமுதன் எனும் சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசனின் டிசிபி ராகவன் பாத்திரத்துக்கு சவால் விடும் வில்லனாக டேனியல் பாலாஜி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மறைந்த நடிகர் முரளியின் தம்பி
நடிகர் முரளியின் உறவினர் மற்றும் தம்பியாக இருந்தாலும், திரைத்துறையில் அவரிடமிருந்து எந்தவொரு உதவியையும் பெறாமல், டேனியல் பாலாஜி தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் பயின்று, பின் தாமாகவே திரைத்துறையில் படிப்படியாக உயர்ந்தார். சித்தி தொலைக்காட்சித் தொடரில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கி, படிப்படியாக திரைத்துறையில் நுழைந்து கவனிக்க வைத்த டேனியல் பாலாஜி, கௌதம் மேனன், வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களின் படங்களில் மிளிர்ந்தார்.
தனித்துவமான நடிகர்
சித்தி சீரியல் தொடங்கி, காக்க காக்க, பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, வட சென்னை ஆகிய திரைப்படங்களில் நடித்த இவரது பாத்திரத்துக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
சென்னை, புரசைவாக்கத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் டேனியல் பாலாஜியின் உடலுக்கு திரைப்பிரபலங்களும் உறவினர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டேனியல் பாலாஜியின் அண்ணன் மகன் அதர்வா, நடிகர்கள் விஜய் சேதுபதி, சென்றாயன் உள்ளிட்ட பலர் முன்னதாக அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை ஓட்டேரியில் டேனியல் பாலாஜியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.