ஜானி மாஸ்டர்
தமிழில் வெளியான மேகம் கருக்காதா , காவாலா , அரேபிக் குத்து உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பாடல்களில் நடனக்கலைஞராக பணியாற்றியவர் ஜானி மாஸ்டர். சமீபத்தில் மேகம் கருக்காதா பாடலுக்கு இவருக்கு சிறந்த நடனக்கலைஞருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்கள் முன்பாக ஜானி மாஸ்டர் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்ததைத் தொடர்ந்து ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
பாலியன் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது
ஜானி மாஸ்டருடன் பெண் ஒருவர் கடந்த சில மாதங்களாக நடன இயக்குநராக பணியாற்றி வருவதாகவும். பணியாற்றிய காலத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த நிகழ்வு திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனக்கு இப்போது 21 வயது என்றும் தான் மைனராக இருந்தபோதே தன்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே திருமணமான ஜானி மாஸ்டர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை மதமாற்றம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இந்திய குற்றவியல் சட்டத்தின் 376, 506 மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்
புகாரளித்த அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அழுத்தம் கொடுத்ததாகவும் அப்படியில்லாத பட்சத்தில் அவதூறு பரப்புவேன் என்று அந்த பெண் கூறியதாக ஜானி மாஸ்டர் வாக்குமூலம் தெரிவித்திருந்தார். புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமாறனிடம் தெரிவித்துள்ளதாக ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜானி மாஸ்டருக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது . அக் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொள்வதற்காக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்
பாலியல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது வழங்குவது குறித்து பல்வேறு கேள்விகள் இருந்து வந்தன. இந்நிலையில் தேசிய விருது வாங்க அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.