காந்தார திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதாக சில தகவல்கள்  தவறாக பரவி வருகிறது.


தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா:


தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா கடந்த 2012ம் ஆண்டு அறிமுகமானது. தொடர்ந்து, இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே என்ற இயற்பெயர் கொண்ட தாதாசாகேப் பால்கேவின் மறைவிற்குப் பின், கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆர்வமுள்ள, இளம், சுதந்திரமான மற்றும் தொழில்முறை திரைப்பட தயாரிப்பாளர்களின் பணியைக் கொண்டாடும் நோக்கத்துடன் விருதுகளை வழங்கி அந்த அமைப்பு கவுரவித்து வருகிறது.


காந்தாரா வெற்றி:


இந்நிலையில் தான் கடந்த ஆண்டு கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கி வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றது. உலகளவில் 400 கோடி ரூபாய் வசூலையும் வாரிக்குவித்தது. கர்நாடகத்தில் வாழும் பழங்குடியின மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து,  ரிஷப் ஷெட்டி தற்போது காந்தாரா படத்தின் 2-ம் பாகத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.


நம்பிக்கை நட்சதிர விருது:


வசூல் ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற காந்தாரா படத்தை இயக்கிய ரிஷப் ஷெட்டியை பாராட்டும் வகையில், நடப்பாண்டிற்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், நம்பிக்கைகுரிய நட்சத்திரம் எனும் பிரிவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை தவறாக புரிந்துகொண்ட சிலர், ரிஷப் ஷெட்டிக்கு திரைப்படத்துறையினருக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும், உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அனால், அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.


தாதா சாகேப் பால்கே விருது:


தாதாசாகேப் பால்கே விருது இந்திய திரைப்படத்துறையில், வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கேவின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கும், அதன் புகழை உலகளவில் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் உதவிய பெரும் கலைஞர்களுக்கு மட்டுமே, இந்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.


விருது வென்ற சாதனையாளர்கள்:


நடிகை தேவிகா ராணி தொடங்கி, சத்யஜித் ராய், நாகிரெட்டி, ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், நாகேஸ்வர ராவ், திலிப் குமார், ராஜ்குமார், சிவாஜி கணேசன், ஆஷா போஸ்லே, அடூர் கோபாலகிருஷ்ணன், கே. பாலச்சந்தர், கே. விஸ்வநாத், அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்டோர், இந்திய சினிமாவிற்கு ஆற்றிய தொண்டை பாராட்டும் விதமாக மத்திய அரசால் தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர்.