சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யா என்பதும் அவர் சமீபத்தில் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சௌந்தர்யா விசாகன் கடந்த சில மாதங்களாக ‘HOOTE” என்ற செயலியை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதும் இது குறித்த தகவல்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. கருத்து பரிமாற்றத்துக்காகவும், வீடியோ, புகைப்படங்களை போஸ்ட் செய்யவும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்றவை மக்களிடையே பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சூழலில் சமீபத்தில் ஆடியோவுக்கான சமூக வலைதளமாக கிளப் ஹவுஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய செயலில் பயனர்கள் குழுமங்களாக இணைந்து உரையாடி வருகின்றனர். கிளப் ஹவுசுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனமும் ஸ்பேசஸ் என்ற வசதியை அறிமுகம் செய்தது. இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் (Rajinikanth) மகள் சவுந்தர்யா ஆம்டெக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஹூட் (HOOTE) என்ற பெயரில் ஆடியோவுக்கான சமூக வலைதள செயலியை தொடங்கி உள்ளார்.



நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா ஹூட் என்ற புதிய செயலியை எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்கள், கருத்துக்களை அவர்களின் குரலிலேயே பதிவிட்டு தெரிவிக்கும் நோக்கில் வடிவமைத்து உள்ளார். இந்நிலையில், தாதா சாகிப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான குரல் பதிவுடன், டெல்லியில் இருந்தபடியே இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார். அந்த குரல் பதிவில், இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. வரும் காலங்களில் இந்த செயலி டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல் மிகவும் பிரபலமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்தார். மேலும் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 15 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளில ஹூட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தளம் அனைவருக்குமானது என்ற அடிப்படையில் சமஸ்கிருத மொழியும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நிகழ்ச்சியில் பேசிய சவுந்தர்யா, “என் அப்பாவுக்கு தமிழ் நன்றாகப் படிக்கத் தெரியும். ஆனால் எழுதத் தெரியாது. முன்பு அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக அவர் ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார், நான் அதனை எழுதி அனுப்புவேன். அப்போது பிறந்த யோசனை தான் இந்த ஹூட் செயலி. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இந்த செய்தியை இங்கு தெரிவிக்கிறேன். அவருக்கு தமிழ் எழுத தெரியாது என்பதால் அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை” என்றார். ரஜினிக்கு தமிழ் எழுதத் தெரியாது என்ற விஷயத்தை, சவுந்தர்யா கூறியது, சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. பலர் சமூக வலைதளங்களில் ரஜினிக்கு எதிராக தங்கள் கருத்தை முன்வைத்து வருகின்றனர். பலர் அண்ணாத்தே திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.