தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பல நடிகர்களும் காணாமல் போய் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் திரையில் ஒரு சில காட்சிகளில் நடித்துவிட்டால் நாம் பெரிய ஆளாகி விடலாம் என்ற எண்ணத்தில் பலரும் பல நாட்கள் பாடுபட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்புகளுக்காக தேடித் திரிகிறார்கள்.


பிரபலமாக இருந்த பலருக்கும் அந்த நிலை என்றால் ஒரு சில படங்களில் மட்டுமே தலை கட்டிய துணை நடிகர்களின் நிலை பற்றி சொல்லவே தேவையில்லை. இது போல பல உதாரணங்களை பார்த்தாலும் சினிமா மீது இருக்கும் மோகம் மக்கள் மத்தியில் குறையவேயில்லை. 


 



அப்படி ஏராளமான கனவுகளோடும் ஆசைகளோடும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியவர் துணை நடிகர் பிரபு. 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் துணை நடிகராக நடித்துள்ளார் என்றாலும் தனுஷ் நடித்த 'படிக்காதவன்' படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.


கடந்த சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் துணை நடிகர் பிரபு. சொந்த பந்தம் என யாருடைய ஆதரவும் இல்லாமல் மருத்துவ செலவிற்கு கூட சிரமப்பட்டு வந்த துணை நடிகர் பிரபுவுக்கு பலரும் மருத்துவ செலவுக்கான உதவிகளை செய்து வந்துள்ளார்கள். 


 



அந்த வகையில் துணை நடிகர் பிரபுவின் பொருளாதார செலவுக்கு உதவி செய்து வந்துள்ளார் இசையமைப்பாளர் டி. இமான். இந்நிலையில், புற்றுநோய்க்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பிரபு சிகிச்சைப்பலனின்றி ஜூன் 15ஆம் தேதியான நேற்று உயிரிழந்தார்.


உறவினர்கள் யாரும் இல்லாததால் பிரபுவின் இறுதிச்சடங்குகளை டி. இமான் செய்துள்ளார். மேலும் அவரின் உடல் தகனத்தின் போது கொள்ளியும் வைத்துள்ளார். டி. இமான் எவரது பாராட்டுகளையும் எதிர்பார்த்து இதை செய்யாவிட்டாலும், கோலிவுட் ரசிகர்களை இமானின் இந்த செயல் நெகிழ வைத்துள்ளது.


பொருளாதார செலவுகளை செய்யவே பலரும் தயங்கும் இந்தக் காலகட்டத்தில் பிரபு உயிருடன் இருக்கும் போது அவருக்கு உதவியதோடு, அவரின் மறைவுக்குப் பிறகு ஆதரவின்றி இருந்த அவரின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை முன்னின்று  செய்து வைத்தது பாராட்டுக்குரியது என நெகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.