Cyclone Michaung: சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ரஜினி, விஜய் போன்ற முன்னணி திரை பிரபலங்கள் ரசிகர்களுக்கு ஆறுதலான வார்த்தை கூட சொல்லாமல், இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதாக நெட்டிசன்ஸ் டிரோல் செய்து வருகின்றனர். 

 

நேற்று முன் தினம் சென்னையை நெருங்க தொடங்கிய மிக்ஜாம் புயல் முந்தைய நாள் நள்ளிரவில் இருந்து ஆக்ரோஷத்தை தொடங்கியது. சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் இருந்த போது தொடங்கிய கனமழை மற்றும் சூறைக்காற்று நேற்றிரவு வரை தொடர்ந்து. இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் சென்னையில் வெள்ளநீர் சூழ்ந்து தனித்தீவாக காட்சியளிக்கிறது. மழை வெள்ளத்திற்கு இதுவரை 8 பேர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவடடங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள சூர்யா மற்றும் கார்த்திக் ரூ.10 லட்சம் கொடுப்பதாக அறிவித்துள்ளனர். 

 

இதற்கு முன்னதாக நடிகை வரலட்சுமி வெளியிட்ட டிவிட்டர் வீடியோவில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி இருந்தார். அவரை தொடர்ந்து நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ பதிவில், அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதாகவும் வயதான பெற்றோர் அச்சத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் மக்களுக்காக அவர்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியே வந்து உதவும்படி காட்டமாக கேட்டுக் கொண்டார். 

 





 

நடிகர் ரோபோ ஷங்கர் வெளியிட்ட வீடியோ பதிவில் மழை நீரில் இரும்பு தகரம் ஒன்று அடித்து கொண்டு சென்றதாகவும், அதை அப்புறப்படுத்த சென்று தனது கால் கிழித்து கொண்டதாகவும் பாதுகாப்பாக இருக்கும்படி கூறியிருந்தார். 

 

சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கும்போது பிரபல நடிகர்கள் ஒருவார்த்தை கூட ஆறுதல் கூறாமல் தனது ரசிகர் மன்றத்தினரை உதவிக்கரம் நீட்டுமாறு கூறாமல் அமைதி காப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த ரசிகர்களை பேரிடர் காலத்தில் ரஜினி மறந்து விட்டாரா..? என்றும், விஜய் மக்கள் இயக்கம் பேரிடர் காலத்தில் காணாமல் போனதா..? என்றும், இன்னும் விஜய் சேதுபதி, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களும், அரசியலில் ஈடுபாடு கொண்ட குஷ்பு போன்ற நடிகைகளும் பேரிடரில் மக்களை மறந்து விட்டனரா என்ற கேள்விகளையும் நெட்டிசன்ஸ் எழுப்பி வருகின்றனர்.