நடிகர் நாகசைதன்யா தமிழில் முதல்முறையாக நடிக்கும் கஸ்டடி படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 


சென்னை 28, சரோஜா, கோவா, மங்கத்தா, பிரியாணி, மாஸ், மாநாடு  ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள வெங்கட் பிரபுவின் அடுத்தப்படமாக “கஸ்டடி” உருவாகியுள்ளது. இந்த படத்தில்  தெலுங்கின் முன்னணி நடிகரான நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார். இதன்மூலம் தமிழில் அவர் ஹீரோவாக  அறிமுகமாகிறார்.  ஹீரோயினாக கிரித்தி ஷெட்டி நடிக்க, சரத்குமார், அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். 




ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கும்  இப்படத்திற்கு  இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இசையமைத்துள்ளனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கியது. நாகசைதன்யாவின் படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகியுள்ள கஸ்டடி படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நாளை (மே 12) வெளியாகிறது. 


முன்னதாக கடந்தாண்டு நவம்பர் 23 ஆம் தேதி  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதில் துப்பாக்கிகளுக்கு நடுவே காக்கி உடையில் குற்றவாளியாக நாகசைதன்யா நிற்கும் புகைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து இந்தப் படத்தின் டீசர் மார்ச் 16 ஆம் தேதி வெளியானது. 


காயம்பட்ட மனம் ஒருவரை எந்த எல்லைக்கு எடுத்துச் செல்லும் என்னும் வசனத்துடன் சாவிடமிருந்து தப்பி ஓடும் நாகசைதன்யா காட்சிகள் அடங்கிய டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்துக்கு நாக சைதன்யா முதன்முறையாக தமிழில் டப்பிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில் கஸ்டடி படத்தின் ட்ரெய்லர் கடந்த மே 5 ஆம் தேதி வெளியானது. 




அதன் இறுதியில் வரும், “ஒரு முறை உண்மைக்காக நின்று பாரு.. உன் லைஃப்பே மாறும்… உண்மை ஜெயிக்க லேட் ஆகும்.. ஆனால், கண்டிப்பா ஜெயிக்கும்” போன்ற வசனங்கள் படத்தில் ஒரு நேர்மையான போலீசாக நாகசைதன்யா நடித்திருப்பதை காட்டுவதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ப்ரீ -ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெங்கட்பிரபு கஸ்டடி படத்தின் கதை மலையாளத்தில் வெளியான நயட்டு படத்தை பார்த்து எழுதப்பட்டதாக நேர்மையுடன் ஒத்துக் கொண்டது அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது. 


இப்படியான நிலையில் கஸ்டடி படம் இருமொழிகளிலும் நாளை தியேட்டர்களில் வெளியாகிவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. மீண்டும் வெங்கட்பிரபு மேஜிக் ஜெயிக்குமா என்பது நாளை தெரிந்து விடும்.