தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் கடந்த மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கஸ்டடி’. கோலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 'மாமனிதன்' படத்துக்குப் பிறகு இளையராஜாவும் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். 


கஸ்டடி:


சென்ற ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் வெளியாகி கவனம் ஈர்த்தது. தொடர்ந்து மார்ச் மாதம் இந்தப் படத்தின் டீசரும் கடந்த மே 5ஆம் தேதி இந்தப் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 


காவல்துறை அதிகாரியாக நாகசைதன்யா இப்படத்தில் நடித்துள்ள நிலையில், விறுவிறுப்பான சேஸிங் காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்று கவனமீர்த்தன. இந்நிலையில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியானது. 


ஏமாற்றம் தந்த வசூல்:


இந்நிலையில், இப்படம் முதல் நான்கு நாள்களில் இந்தியா முழுவதும் 7.8 கோடிகள் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk தளத்தின் புள்ளிவிவரங்களின்படி முதல் நாள் 3.2 கோடிகளும், இரண்டாம் நாள் 1.68 கோடிகளும், மூன்றாம் நாள் 1.75 கோடிகளும் வசூலித்துள்ளது. 


நான்காம் நாளான இன்று ஒரு கோடி வரை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  சுமார் 30 கோடிகள் பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக குறைவான தொகையையே  வசூலித்துள்ளது.


காத்து வாங்கும் தியேட்டர்கள்:


மேலும் வார இறுதி நாள்களிலேயே திரையரங்குகளில் காத்து வாங்கத் தொடங்கிய நிலையில், இப்படம் கடும் சரிவை சந்தித்து வருவதாகவும், இப்படியே போனால் படம் படுதோல்வியடையக்கூடும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 


கடந்த 2021ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று மாபெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து சென்ற ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ’மன்மத லீலை’ படம், சுமாரான வரவேற்பைப் பெற்ற நிலையில்,  கஸ்டடி ஹிட் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.


 






ஆனால் இந்தப் படம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக சுமாரான வசூலையே குவித்து வருகிறது.


மேலும் படிக்க: 'குடும்பத்தைக்‌ கையாள கற்றுக்கொண்டால்‌ சமூகத்தை எளிமையாக கையாண்டு வாழ்க்கையில்‌ வெற்றிபெற முடியும்‌' - நடிகர்‌ இளவரசு