யார் எப்படியோ என்னுடைய மண், மக்கள் முக்கியம். நான் அவர்களை விட்டு போகமாட்டேன் என இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார். 


ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி மண் சார்ந்த படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் தங்கர்பச்சான். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த அவர், நடந்து முடிந்த மக்களை தேர்தலில் பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனிடையே இன்றைய தினம் விருத்தாச்சலம் தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த தங்கர்பச்சான் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு பேசினார். 


அப்போது, “நாம் சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து உள்ளோமா என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கணும். அதுக்கான வாய்ப்பு இது. நான் காலையில் உடற்பயிற்சிக்கு செல்லும்போது எனக்கு அறிமுகமில்லாத சிலரை சந்திப்பேன். அவர்கள் என்னிடம், “உங்களுக்கு  அரசியல் வேண்டாம். நீங்கள் எப்படிப்பட்ட படம் எடுக்கிறவர்கள். அரசியலை விட்டுவிடுங்கள். நீங்கள் இதற்குள் போய் என்ன பண்ணப் போகிறீர்கள்?” என சொல்கிறார்கள். சரி நான் போகவில்லை. ஆனால் இதனை சரிசெய்பவர்கள் யார் என கேட்டேன். 


நீங்களும் உங்கள் பிள்ளைகளை சரி பண்ண அனுப்ப மாட்டிங்க. கல்வி திட்டத்திலும் ஆசிரியர்கள் சொல்லித்தர மாட்டார்கள். அரசியல் சாக்கடை தான். அதனை சரி பண்ணவில்லை என்றால் ஒருகட்டத்தில் நாம் அதை சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் இருப்போம். அதுக்காக தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். காமராஜரையும், அண்ணாவையும் தோற்கடித்த மக்கள் அதன்பிறகு வருத்தப்பட்டார்கள், தமிழ்நாட்டில் 40க்கும் 40 வெற்றி கொடுத்திருக்கிறீர்கள். இந்த கொண்டாட்டம் எல்லாம் ஒருநாள் தான். ஒரு மாதம் கழித்து பாருங்கள். கடந்த முறை 38 எம்.பி.க்கள் தேர்வாகி ஒன்றும் கிழிக்கவில்லை. மத்திய அரசு 5 வருடமா எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். 


யார் எப்படியோ என்னுடைய மண், மக்கள் முக்கியம். நான் அவர்களை விட்டு போகமாட்டேன். என்னுடைய சினிமா, அரசியல் உங்களுக்காக தான். இந்த மண் குடிகாரர்களின் நாடாகவும், போதைப்பொருள் விற்பனை அதிகமாக உள்ள மாநிலமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகளை கார் ஏற்றி கொல்லும் நிலை இருக்கிறது. மணல் கடத்தலுக்கு துணை போகிறவர்கள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி,க்கள் தான். இப்படிப்பட்டவர்களை தான் நீங்கள் தொடர்ந்து தேர்வு செய்கிறீர்கள். 


எல்லா பிரச்சினைக்கும் காரணம் குடி தான். அதற்கு மக்களாகிய நீங்கள் பழகி விட்டீர்கள். திருடுவதற்கான சாவியை அவர்களிடமே வழங்கி விட்டீர்கள். பாமக மக்களுக்கு எப்பவும் பாடுபடும் கட்சி. 2026 ஆம் ஆண்டுக்கு பிறகு மக்களுக்கான மாற்றம் வரும். உள்ளூர் பிரச்சினையை தீர்க்க யாரும் வரமாட்டாங்க. மக்களாகிய நீங்களும் ஊமையாகவே இருங்க. உங்களுக்கு வாய் இருக்குல. போராட்ட குணம் இல்லாத மக்கள் உங்களுக்கு எல்லாம் எதற்கு ஓட்டு. வாய் உள்ள பிள்ளைகள் தான் பிழைக்கும். எனக்கு வாக்களித்த மக்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.