பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறை உணர்வைத் தடுக்கும் வகையில், நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது.


பள்ளிகளில் மாணவர்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், காவி நிறக் கயிறுகளை அணிந்து சாதி அடையாளங்களை வெளிப்படுத்துவதாகப் புகாரின் எழுந்தது. குறிப்பாக, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி போன்ற தென் மாவட்டங்களிலேயே ]இதுபோன்ற சாதிக் கயிறு சர்ச்சை அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டது.


இதைத் தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரின் சார்பில் சாதி கயிறு தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘’பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் சாதியை அடையாளப்படுத்துவதாக தெரிய வருகிறது. இதனால் பல சாதிக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் போதும் மற்றும் விளையாடும் நேரத்திலும் பள்ளி நேரத்திலும் அனைவரோடும் கலந்து பழகாமல் குழுக்களாக இயங்கும் சூழல் உருவாகியுள்ளது.


சாதிப் பிரிவினையைத் தூண்டுவோரின் மீது கடும் நடவடிக்கை


எனவே மாணவர் நலன் கருதி தலைமை ஆசிரியர்கள் இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இது போன்று சாதிக் குழுக்களாகப் பிரிவதால் ஏற்படும் மோசமான விளைவுகளை காலை பிரார்த்தனைக்குக் கூடும்போது எடுத்துக் கூறிடுமாறு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், சாதிப் பிரிவினையைத் தூண்டுவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரித்திடுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 


மாணவர்கள் சாதி அடையாளமாக வண்ண வண்ண கயிறுகளை அணிவதைத் தடுக்குமாறு அனைத்துவகை பள்ளிகளின் தலைமையாசிரியர்களும், மெட்ரிக் பள்ளி முதல்வர்களும் கேட்டுக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.


இதை மேலும் பரிசீலித்த அரசு சாதி வேறுபாட்டைத் தவிர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது.  இதற்கிடையே ஆணையம் தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் இன்று  சமர்ப்பித்துள்ளது. நீதிபதி சந்துரு அந்த அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இயக்குநர் அறிவொளி மற்றும் உயர் அதிகாரிகளுடன் சென்று முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தார். அப்போது, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் உடனிருந்தார்.


இந்த அறிக்கையில், சாதி வன்முறையை ஒழிக்க உடனடியாகச் செய்ய வேண்டியவை, நீண்டகால செயல் திட்டங்கள் என இரு விதமான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகள் என்னென்ன?


* அரசுப் பள்ளிகளில் உள்ள சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும்.


* மாநிலம் முழுவதும் சாதி ரீதியான பெயர்கள் பள்ளிகளின் பெயரில் இருந்தால் அதை நீக்க வேண்டும்.


* பள்ளிகளுக்கு நன்கொடை வழங்குபவரின் பெயரைச் சாதிப் பெயரோடு சேர்த்துப் பதிவு செய்யக் கூடாது. 


* பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பவரைக் கல்வி அதிகாரியாக நியமிக்கக் கூடாது.


இவை உள்ளிட்ட பரிந்துரைகள் முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளன.