நாயகன் திரைப்படத்தில் மிகவும் பிரபலமான கமல் அழும் காட்சி படமாக்கப்பட்ட ஸ்வாரஸ்யமான அனுபவத்தை கமல்ஹாசன் கூறி இருக்கிறார். 


நாயகன்


மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான நாயகன் திரைப்படம் கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு டெக்ஸ்ட்புக் என்று கூறலாம். இந்த படத்தில் தனது மகன் இறப்பை கண்டு கமல் அழும் காட்சி இன்றுவரை பலரால் பேசப்படுகிறது. அதில் அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு அழும் அழுகையை அவரே வேறெந்த படத்திலும் செய்தது இல்லை. அப்படி ஒரு தனித்துவமான அழுகை. அதனை கமலின் அழுகை என்பதைவிட வேலு நாயக்கரின் அழுகை என்றே பார்ப்பவர்கள் நம்பி இருப்பார்கள். அந்த அழுகை எப்படி உருவானது என்பது குறித்து கமல் சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனிடம் கூறும் விடியோ ஒன்று வைரலாகி வந்தது. அதில் கமல் அந்த அழுகை ப்ரொட்யூசர் வரவைத்த அழுகை என்று கூறி விளக்கினார். 



இரண்டு நாள் எடுத்த காட்சி


அவர் பேசுகையில், "அந்த ஷாட் மிகவும் முக்கியமான ஷாட் என்பதால் மணிரத்னம் வெவ்வேறு அங்கில்களில் வித்யாசமான முயற்சிகள் பல செய்து எடுத்துக்கொண்டிருந்தார். 4 நிமிடம் ஒரே ஷாட்டில் வருவதால் க்ரேனில் மேலே செல்லும்போது சரியாக நான் கீழே விழ வேண்டும். முன்னாலேயே செய்துவிட்டால் அது கேமராவில் தெரியாது. அந்த காட்சியில் ஒவ்வொரு அசைவும் கம்போஸ் செய்யப்பட்டிருந்தது. அதை நாங்கள் இரண்டு நாள் எடுத்தோம். முதல் நாள் எதுவுமே ஒர்க்கவுட் ஆகல, ரெண்டாவது நாள் திரும்ப திரும்ப சோதப்பிக்கிட்டே இருந்தோம்", என்றார். 


தொடர்புடைய செய்திகள்: உஷாரா இருங்க... கேன்சர் கூட வரலாம்: உணவு உண்ணும் நேரம் முக்கியம்: ஆய்வு சொல்வது என்ன?


ப்ரொட்யூசர் கோபம்


மேலும், "முடிச்சே ஆகனும்ன்னு தீவிரமா ரிகர்சல் பண்ணிட்டு வர்றேன் ப்ரொட்யூசர் வந்து என்ன பண்றீங்க, எனக்கு ஒன்னும் புரியல, ரீல்ஸ் வேஸ்ட் ஆகுது. இன்னைக்கு கோட்டா முடிஞ்சுது நாளைக்கு வந்து எடுத்துகோங்கன்னு சொல்லிட்டு போய்ட்டார். நான் வெளில வர்றேன் மணி சார் ஷாட் ரெடி பண்ணாம உக்காந்திருக்கார், என்னன்னு கேட்டா இன்னைக்கு கோட்டா ரீல்ஸ் முடிஞ்சுதுன்னு பேப்பரை காட்டுறார். நான் ரெடி ஆகிட்டேன் இன்னைக்கு முடிச்சே தீரனும்ன்னு, ராஜ்கமல் ஆபீசுக்கு போன் பண்ணி கொண்டு வர சொல்லிட்டேன். அப்படி எடுத்தோம் அந்த ஷாட். அதுல அந்த அழுகை உண்மையானது, என்ன இப்படி பண்ணிடீங்களேன்னு நெனச்சு கதறினேன்", என்று கூறினார். 



சக நடிகர்கள்தான் காரணம்


மேலும் பேசிய அவர் அந்த ஷாட்டில் அவ்வளவு தத்ரூப அழுகை வந்ததற்கு காரணம் சுற்றி இருந்தவர்கள்தான் என்றார். "பொதுவாக துக்க வீடுகளே மிகவும் துயரம் மிகுந்ததாகத்தான் இருக்கும். அதிலும் அங்கிருப்பவர்கள் அவரை பற்றி சொல்லி அழுவதை கேட்கையில் இன்னும் துக்கம் கவ்விக்கொள்ளும். அப்படிதான் இந்த காட்சியிலும், அருகில் இருப்பவர்கள் அவரைப் பற்றி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே இருக்க, ஒவ்வொருவரும் அழுதுகொண்டிருப்பார்கள், அதனை பார்க்கும்போதே நமக்கு இன்னும் தொண்டையை அடைக்கும். அப்போது வந்ததுதான் அந்த கதறல்" என்று கூறினார்.