கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்தை தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள் திருமணம் செய்ய உள்ள தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாபா அபராஜித் தனது 17 வயதில் ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமானார். 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனைத் தொடர்ந்து 2013-14 துலீப் டிராபியில் மேற்கு மண்டலத்திற்கு எதிராக தென் மண்டல அணியில் களம் கண்ட அபராஜித் இரட்டை சதம் விளாசி அசத்தினார். தற்போது இந்திய ஏ அணியில் விளையாடி வரும் அவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.
சமீபத்தில் பாபா அபராஜித்திற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் என்ன இருக்கிறது என நினைத்தால் மணப்பெண், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தலைவாசல் விஜய்யின் மகள் தான் என்பது ஸ்பெஷலான தகவல்.
செல்வா இயக்கிய தலைவாசல் படத்தின் மூலம் அறிமுகமான விஜய், இன்றளவும் தலைவாசல் விஜய் ஆகவே அழைக்கப்படுகிறார். காமெடி, வில்லன், குணச்சத்திரம் என பலவிதமான கேரக்டரில் அவர் நடித்துள்ளார். அவரது சினிமா கேரியரில் தேவர் மகன், மகளிர் மட்டும், காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை, சிம்ம ராசி, கண்ணுக்குள் நிலவு, வல்லரசு, வாஞ்சிநாதன், அபியும் நானும், உன்னை நினைத்து, பகவதி, அருள், சண்டக்கோழி, பீமா, அறை எண் 305ல் கடவுள், ஜே ஜே, சிங்கம் 2, பூஜை உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்புக்கு பாராட்டை பெற்றார்.
அவரது மூத்த மகளான ஜெயவீணாவை தான் அபராஜித் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார். நீச்சல் வீராங்கனையான ஜெயவீணா, அந்த துறையில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் திருமண நிச்சயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மணமக்கள் இருவரும் தங்கள் சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அபராஜித் - ஜெயவீணா ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.