சீரியல் டப்பிங் முடிந்து சென்று கொண்டிருந்த என்னை ஒருவர் திட்டி விட்டு சென்றதை வாழ்க்கையில் மறக்க முடியாது என சீரியல் நடிகை கௌதமி வேம்புநாதன் தெரிவித்துள்ளார்.
விகடன் நிறுவனம் தயாரிப்பில் சன் டிவியில் 2007 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை கிட்டதட்ட 1,360 எபிசோட்கள் ஒளிபரப்பான சீரியல் ‘திருமதி செல்வம்’. இந்த சீரியலில் சஞ்சய், அபிதா, கே.ஆர்.வத்சலா, தீபக், வடிவுக்கரசி, பிரியா, சிலோன் மனோகர், சூரி, வி.சி.ஜெயமணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எஸ்.குமரன் இயக்கிய இந்த சீரியல் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த சீரியல்களில் ஒன்றாகும்.
திருமதி செல்வம் சீரியல் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக ஒளிபரப்பி வருகிறது. இந்த சீரியலில் நடிகர் சஞ்சீவின் அம்மா கேரக்டரில் நடித்து மிகப்பெரிய நடிகையாக பிரபலமானவர் கௌதமி வேம்புநாதன். அவர் திருமதி செல்வத்தில் நடித்த அனுபவங்களை சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், “என்னுடைய அப்பா ஒரு மேடை நடிகர் மறைந்த நடிகர் வி எஸ் ராகவன் நடத்திய குழுவில் நடிகராக இருந்தார். அந்த அனுபவத்தில் அப்பாவுக்கு தெரிந்தவர் ஒருவர் மூலம்தான் எனக்கு முதன் முதலில் சீரியல் வாய்ப்பு கிடைத்தது.
தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சீரழில் தமிழ் பேராசிரியராக நடித்தேன். அதன் பிறகு எனக்கு தொடர்ந்து சீரியல் வரத் தொடங்கியது. அதில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது என்றால் அது திருமதி செல்வம் சீரியல் தான். நான் செய்த கேரக்டரில் முதலில் கே.ஆர்.வத்சலா அம்மா தான் நடிச்சிட்டு இருந்தாங்க. ஆனா அவங்க வெளியூர் போக வேண்டிய நிலை ஏற்பட்டதால் அதற்கு பதிலாக நடிப்பதற்கு என்னை அணுகினார்கள்.
சொல்லப்போனால் இத்தனை ஆண்டுகள் நடித்து வரும் என் பெயர் கூட யாருக்கும் தெரியாது. எங்கு போனாலும் திருமதி செல்வம் சீரியலில் நடித்த ‘பாக்கியம்’ என்றே என்னை அழைப்பார்கள். திருமதி செல்வம் சீரியலில்ம் சஞ்சீவ் மற்றும் அபிதா ஆகிய இருவர் மீதும் நான் மண்ணை வாரி தூற்றி விட்டு சாபம் கொடுக்கும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்தக் காட்சியை படமாக்கும் போது அபிதா 8 மாத கர்ப்பமாக இருந்தார் அதேபோல் சஞ்சீவ் மனைவி பிரீத்தியும் கர்ப்பமாக இருந்தார்.
அதனால் அந்த சீனை எப்படி பண்ண முடியும் என தெரியாமல் தயங்கினேன். பின்னர் இரண்டு பேரையும் கொஞ்சம் தள்ளி நிற்க சொல்லிவிட்டு மண்ணை அவங்க மேல் படாத மாதிரி வீசி நடித்தேன். இந்த சீனை என்னால் இன்றைக்கும் மறைக்கவே முடியாது. அதேபோல் டப்பிங் முடித்துவிட்டு கே.கே.நகரில் வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது ஒருவர் பின் தொடர்ந்து வந்தார். என்னை மறித்தவர் நீயெல்லாம் பொம்பளையா? என கேட்டு சத்தம் போட்டார் .
அதன் பிறகு என்னுடைய மாமா என்னை வண்டியில் எங்கும் அனுப்புவதே இல்லை அந்த சீரியலுக்காக எனக்கு 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லி விருது கிடைத்தது. அதை சமீபத்தில் தான் பெற்றுக் கொண்டேன். விருது வாங்கும் போது திருமதி செல்வம் சீரியல் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது” என கௌதமி தெரிவித்துள்ளார்.