மாணவர்களை அடித்து அவதூறு
அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடித்து அவதூறாகப் பேசிய காரணத்துக்காக நடிகை ரஞ்சனா நாச்சியாரை இன்று காலை காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பள்ளி மாணவர்கள் தவிர்த்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரையும் அவர் அவதூறாகப் பேசிய வீடியோ இணையதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து ரஞ்சனா நாச்சியாருக்கு சமூக வலைதளத்தில் எதிர்ப்புகள் வரத் தொடங்கின.
இதனையடுத்து இன்று காலை மாணவர்களை அடித்தது, அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர்களை அவதூறாக பேசியது, அரசு பேருந்தை வழிமறித்தது உள்ளிட்ட சம்பவத்திற்காக கைது செய்து விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். முன்னதாக காவலர்கள் கைது செய்ய வந்தபோது அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் நடிகை ரஞ்சனா. அதே போன்று பெண் காவலர்கள் மூலமாகவே அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சனா மீது வழக்குப் பதிவு
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகவே இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்த மாங்காடு இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் போலீசார் அவரது வீட்டிற்குள் சென்று, ரஞ்சனா நாச்சியாரை கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். மாணவர்களை அடித்ததும் அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர்களை அவதூறாக பேசியது அரசு பேருந்தை வழிமறித்தது உள்ளிட்ட சம்பவத்திற்காக நடிகை ரஞ்சனா மீது 294b, 323, 341, 353,Sec 75 உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் போடப்பட்டது. ஶ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நடிகை ரஞ்சனா நாச்சியாரை மாங்காடு போலீசார் ஆஜர்படுத்தினர்.
ரஞ்சனா தரப்பு வாதம்
மாணவர்களின் உயிர் மேல் உள்ள அக்கறையிலே பேருந்தை நிறுத்தி வாக்குவாதம் செய்ததாகவும், தன் குழந்தையை போல் பாவித்து தான் மாணவர்களை தான் அடித்தார் எனவும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு போவதால் உயிர் சேதத்தை தவிர்க்கவே ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து தான் இப்படி செய்ததாகவும் நடிகை ரஞ்சனா தரப்பு வாதமாக முன்வைக்கப் பட்டது.
மேலும் அவரது இந்த நடத்தையை சாலையில் இருந்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர் என்றும் கூறப்பட்டது. இதனால் ரஞ்சனாக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராம்குமார் உத்தரவிட்டுள்ளார் . 40 நாட்கள் காலை மாலை மாங்காடு காவல் நிலையத்தில் நடிகை ரஞ்சனா கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.