மலையாள திரையுலகை பொறுத்தவரை குறைந்த பட்ஜெட்டில் நினைத்து பார்க்க முடியாத கதைகள் மூலம் ரசிகர்களை கவரும் படங்கள் நிறைய வந்துள்ளன. ஒன்லைன் ஸ்டோரியில் மிரட்டிய படங்களின் லிஸ்டும் ஏராளம். அந்த வகையில் கடந்தாண்டு இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வரவேற்பு பெற்றது. அதனோடு திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தை வியந்து பாராட்டினார்கள்.
குணா குகையை மையப்படுத்தி உருவான படம் என்பதால், கண்மணி அன்போடு பாடலும் ரசிகர்களை அதிகளவில் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரூரைச் சேர்ந்த சிராஜ் என்பவர், படத்தின் பின்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்திருந்தார். தான் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும், படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பின்பு தனக்கு வாக்களித்தபடி 40 % பங்கு லாபம் கிடைக்கவில்லை என எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த மோசடியால் ரூ.47 கோடி வரை நஷ்டம் அடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் சினிமா துறையில் நிதி மோசடிகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை நேரடியாக விசாரணையை நடத்தியது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான செளபின் சாஹிரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் படம் தயாரிப்பு முதலீடு, செலவு, வரவு போன்றவை குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. நிதி மோசடி வழக்கில் கேரள நீதிமன்றம் ஏற்கனவே அவருக்கு முன்ஜாமின் வழங்கியதால் போலீசார் அவரை விடுவித்தனர். மேலும் அந்த வழக்கில் நடிகர் செளபின் சாஹிர் நீதிமன்றம் நிபந்தனைகளையும் விதித்தது.
இந்நிலையில், துபாயில் நடக்கும் பட விழாவிற்கு செல்ல அனுமதி கோரி செளபின் சாஹிர் நீதமன்றத்தை நாடியுள்ளார். ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்து, துபாய் செல்ல கோர்ட்டு தடை விதித்தது. இதனால், மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.