நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி ரிலீசானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருப்பதுடன் அமீர்கான், நாகர்ஜுனா, சத்யராஜ், செளபின் சாஹிர், உபேந்திரா என நட்சத்திர பட்டாளங்களே குவிந்திருந்ததால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியது.
ஞாயிற்றுக்கிழமை வசூல் எவ்வளவு?
படம் வெளியானது முதலே கலவையான விமர்சனங்கள் வெளியாகிய நிலையில், நாளுக்கு நாள் படத்தின் வசூல் சரிந்து வருகிறது. இந்தியாவில் முதல் நாள் ரூ.65 கோடியும், 2வது நாள் ரூ.54 கோடியும், 3வது நாள் ரூ. 39.5 கோடியும் வசூலித்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான 4வது நாள் வசூல் என்ன என்பதை காணலாம்.
தொடர் விடுமுறையின் கடைசி நாள் என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கூலி படத்தின் வசூல் முதல் நாளுக்கு நிகராக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், 4வது நாளான நேற்று எதிர்பார்த்ததை விட மிக குறைவாகவே அமைந்தது. அதாவது, இந்திய அளவில் ரூபாய் 35 கோடி மட்டுமே தமிழில் கூலி வசூலித்துள்ளது.
நான்கு நாள் வசூல் எவ்வளவு?
கடந்த நான்கு நாட்களில் மட்டும் கூலி படம் இந்தியாவில் ரூபாய் 194.25 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. நான்காவது நாளான நேற்று காலைக்காட்சிக்கு 45.47 சதவீதமும், மதிய காட்சிக்கு 69.97 சதவீதமும், மாலைக் காட்சிக்கு 76.73 சதவீதமும், இரவுக் காட்சிக்கு 62.81 சதவீதமும் இருக்கைகள் நிரம்பியிருந்தது. மதிய காட்சி மற்றும் மாலைக் காட்சிகள் எதிர்பார்த்ததை விட குறைவாகவே புக்கிங் இருந்தது. கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் இருப்பதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
சென்னையை காட்டிலும் திருச்சியில்தான் நேற்று ரசிகர்கள் கூட்டம் கூலி படத்திற்கு அதிகளவு இருந்தது. அதாவது, திருச்சியில் 86 சதவீதம் இருக்கைககள் நிரம்பியிருந்தது. சென்னையில் 85 சதவீதம் காட்சிகள் நிரம்பியிருந்தது. மதுரையில் 65.75 சதவீதமும், பாண்டிச்சேரியில் 78 சதவீதமும், சேலத்தில் 58 சதவீதமும், கோயம்புத்தூரில் 80.50 சதவீதமும், வேலூரில் 62.50 சதவீதமும், திண்டுக்கல்லில் 82.50 சதவீதமும் காட்சிகள் நிரம்பியிருந்தது.
இந்தியில் எப்படி?
பெங்களூரில் 48 சதவீதமும், திருவனந்தபுரம் 27 சதவீதமும், மும்பை 39.50 சதவீதமும், டெல்லியில் 24 சதவீதமும் காட்சிகள் நிரம்பியிருந்தது. கூலி இந்தியில் ஓரளவு நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்தியில் நேற்று மும்பை, டெல்லி, புனே, பெங்களூர், லக்னோ ஆகிய நகரங்களில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தியில் வெளியான கூலி படத்திற்கு பெங்களூர் 65.25 சதவீதமும், லக்னோவில் 50.75 சதவீதம் இருக்கைகள் நிரம்பியிருந்தது. எதிர்பார்த்ததை விட கூலி படம் நாளுக்கு நாள் வசூலில் சறுக்கி வருகிறது என்பது ரஜினி ரசிகர்களுக்கு வேதனையாகவே அமைந்துள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கூலி படத்தில் அதிகளவு வன்முறை மற்றும் ரத்தக்காட்சிகள் இருந்த காரணத்தினால் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கமான ரஜினி படத்திற்கு வரும் குடும்ப ரசிகர்கள் திரையரங்கில் இந்த படத்தை காணும் வாய்ப்பை இழந்துவிட்டனர். இதனாலும் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் குறைவாக காணப்படுகிறது.