தொலைக்காட்சி நடிகரும் தொகுப்பாளருமான முகமது குரேஷியின் மனைவி ரிஸ்வானா, காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் என்பவர் மீது ரூ.10 லட்சம் மோசடி புகார் அளித்துள்ளார்.

Continues below advertisement

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் முகமது குரேஷி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரிஸ்வானா, சென்னையில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

காங்கிரஸ் நிர்வாகி மீது மோசடி புகார்

இந்த நிலையில், அவசர பணத்தேவைக்காக கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி தனது தங்க நகைகளை ரூ.14 லட்சத்துக்கு விற்பனை செய்ய ரிஸ்வானா முடிவு செய்துள்ளார். இதற்காக தனது நண்பர்கள் இடம்பெற்ற வாட்ஸ்அப் குழுவில் நகைகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

அப்போது அவருக்கு அறிமுகமான ஒருவர், நல்ல விலைக்கு நகைகளை விற்பனை செய்து தருவதாகக் கூறி காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாரின் தொடர்பு எண்ணைக் கொடுத்துள்ளார். இதையடுத்து ரஞ்சன் குமாரை தொடர்புகொண்ட ரிஸ்வானா, 92.73 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அவரிடம் விற்பனைக்காக ஒப்படைத்துள்ளார்.

நகைகளை விற்பனை செய்த ரஞ்சன் குமார், ரிஸ்வானாவுக்கு ரூ.4 லட்சம் மட்டுமே கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.10 லட்சத்தை வழங்காமல் ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பலமுறை பணத்தைக் கேட்டும் அவர் மீதமுள்ள தொகையை வழங்கவில்லை என ரிஸ்வானா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ரிஸ்வானா சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் ரஞ்சன் குமார் மீது புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.