துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், ராஜா காதல் படங்களை இயக்கியவர் எழில். காதல் படங்களையும் தாண்டி காமெடி படங்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் தேசிங்கு ராஜா. விமல் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து 12 வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. 

Continues below advertisement

ரசிகர்களை கவர்ந்த டிரைலர்

தேசிங்கு ராஜா 2ஆம் பாகம் குறித்த செய்திகள் வெளியானபோதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரலைரும் கலாட்டா காமெடியுடன் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில், விமல், குக் வித் கோமாளி புகழ் பெண் வேடத்தில் போலீசாக நடித்துள்ளனர். காவல் நிலையத்திற்குள் நடக்கும் அட்ராசிட்டியை காமெடியுடன் இயக்குநர் எழில் இயக்கியுள்ளார். ஹாலிவுட்டை போன்றே தமிழிலும் 2ஆம் பாகம் எடுப்பது டிரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் தேசிங்கு ராஜா திரைப்படமும் இடம்பிடித்திருக்கிறது. இப்படம் வரும் ஜூலை 11ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

அக்கட தேசத்து நாயகிகள்

 இப்படத்தில் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதாவும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இவர்களோடு சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்றும் தேசிங்கு ராஜாவை மிஞ்சும் அளவிற்கு இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

சினிமாவை அழித்துவிடாதீர்கள்

இந்நிலையில், தேசிங்கு ராஜா 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் புகழ், பண தேவைக்காக விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை அழித்து விடாதீர்கள். படத்தில் நடிப்பு நன்றாக இல்லை என்று மக்கள் சொன்னால் கண்டிப்பாக நாங்கள் மாற்றிக்கொள்கிறோம். ஒரு படத்தை எடுக்க மிகவும் கஷ்டப்படுகிறோம். எல்லோரும் நல்ல படங்களை கொடுக்கவே முயற்சிக்கிறார்கள். விமர்சனத்தால் ஒட்டு மொத்த உழைப்பும் வீணாகிவிடுகிறது என தெரிவித்தார்.

படத்திற்கு விமர்சனம் தேவையா?

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் திரை விமர்சகர்களை தயாரிப்பாளர் முதல் இயக்குநர்கள் வரை கடுமையாக சாடி வருகின்றனர். திரை விமர்சகர்களால் சினிமாவிற்கு பேராபத்து ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழந்துள்ளது. விமர்சனம் என்பது தனிமனித கருத்து சுதந்திரம், அதில் யாரும் தலையிட முடியாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அண்மையில் இயக்குநர் பாலா பறந்து போ படத்தின் விழாவிலும் திரை விமர்சர்களின் பாதம் தொட்டு வேண்டுகிறேன் என தெரிவித்தார். அவரை தொடர்ந்து புகழ் சினிமாவை அழித்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார். இந்த கருத்திற்கு எதிர் கருத்துகள் இருந்தாலும் திரை விமர்சகர்கள் எவ்வாறு உணர்வார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.