விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகராக அறிமுகமானார் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்கள் இணையத்தில் வைரலானது. அதனைத்தொடர்ந்து அவர்  ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் அவர் செய்த லூட்டிகள், சேட்டைகள் எல்லாம் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போக, இவருக்காகவே இந்த ஷோவை பார்க்க வந்த ரசிகர்கள் ஏராளம். இந்நிகழ்ச்சியின் 2 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 2-வது சீசன் முடிவுக்கு வந்தது. ஆனாலும் இன்றளவும் சிவாங்கி அடிக்கும் லூட்டிகள் யூடியூப்பில் வியூசை அள்ளிக்கொண்டுதான் இருக்கிறது.


சின்னத்திரையில் கிடைத்த புகழின் மூலம் தற்போது வெள்ளித்திரையிலும் சிவாங்கி காலடி பதித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள  ‘டான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவாங்கி நடித்து வருகிறார். 


இந்த நிலையில்தான் சிவாங்கி பாடி நடித்துள்ள 'NO NO NO NO’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை சிவாங்கியும், சூப்பர் சிங்கர் பாடகரான ஐய்யனார் மற்றும் இந்த பாடலின் இசையமைப்பாளர் கார்த்திக் தேவராஜ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை ரவூபா (  HK Ravoofa ) எழுதியுள்ள நிலையில், பர்திவ் மணி- ( Parthiv Mani) இயக்கியுள்ளார். இந்த பாடல் வீடியோ தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. 



இந்த நிலையில் இந்த பாடல் குறித்தும், அதில் நடித்தது குறித்து சிவாங்கி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேசியுள்ளார். 


அதில், “ நிறைய சாங்ஸ் -ல நான் கேமியோ ரோல் பண்ணிருக்கேன். ஆனா இந்த பாட்டுலதான் லீடு கேரக்டர்ல நடிச்சிருக்கேன். ஒரு பாடலை நானே பாடி அதுல நடிக்கனும் அப்படிங்கிறது என்னோட கனவு. அது இப்போ நிஜமாகியிருக்கு. இது எனக்கு புது அனுபவமா இருந்துச்சு. இத பண்ணுறதுக்கு முன்னாடி எந்த அளவு எக்ஸைட்டடா இருந்தேனோ அதே அளவு பதட்டமாவும் இருந்தேன். இந்த சாங் ரெக்கார்டு பண்ணும் போது, கார்த்தி முடிஞ்ச அளவு என்னோட வாய்ஸ் - ல இருந்து வித்தியாசமான சவுண்டை கொண்டு வர முயற்சி செய்தார். இதிலிருந்து நான் நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன்.” என்றார்.