Dharsha gupta | தனி வீடு.. இலவச உணவு.. 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தாவின் லாக்டவுன் உதவி!
சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா சாலையோர மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக இலவசமாக உணவுகளை தயாரித்து வழங்கி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு ஏற்கெனவே அமலில் இருந்த ஊரடங்கை, கடந்த 24-ந் தேதி முதல் எந்த தளர்வுகளும் இல்லாத ஊரடங்காக மாற்றி அறிவித்தது. இதனால், எந்த கடைகளும், உணவகங்களும் இயங்கவில்லை. ஸ்விக்கி,சொமோட்டோ போன்ற நிறுவனங்களின் சேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள இந்த முழு ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசின் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டும், நடமாடும் மளிகை மற்றும் காய்கறி வண்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சாலையோரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களது உணவுத்தேவைகளுக்கும் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Just In




இந்த நிலையில், தமிழ் சின்னத்திரையில் எதிர்மறை கதாபாத்திரங்களான வில்லி வேடத்தில் நடித்து வருபவர் தர்ஷா குப்தா. இவர், இந்த ஊரடங்கால் வாடும் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தேவையான உணவுகளை இலவசமாக வழங்கி வருகிறார்.

சாலையோரங்களில் உதவும் கரங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு நாம் உதவாவிட்டால், யார் உதவுவார்கள் என்றும். உங்களால் முடிந்ததை உதவுங்கள் என்றும் தர்ஷா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஒரு வாரமாக இந்த சேவையை செய்து வரும் தர்ஷா, சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு தானே நேரில் சென்று உணவுகளை வழங்கி வருகிறார்.
இவர், இந்த ஊரடங்கு நேரத்தில் அவர் உணவுகளை வழங்குவதற்காக தினமும் வெளியே சென்று வருவதால், வீட்டில் இருப்பவர்களின் பாதுகாப்பு கருதி தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர் அங்கிருந்தே உணவுகளை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தர்ஷா குப்தா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் ஜீ தொலைக்காட்சியின் சில தொடர்களிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.