தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்புபவர்கள் பாடு இந்தக் கடும் மழையில் பெரும் திண்டாட்டம்தான். கடைசி நிமிடத்தில் வண்டி பிடித்து வருபவர்கள் தனியார் பேருந்துகளின் கொள்ளை டிக்கெட் விலையைப் பார்த்து இதுக்கு ப்ளேன்லையே போயிரலாம் என ரன்னிங்கில் ஏறி வருவது போல விமானம் ஏறி வருவது சர்வசாதாரணமாகிவிட்டது.


அப்படி தூத்துக்குடியிலிருந்து விமானம் ஏறி வந்த இருவர் அந்த விமானநிலையம் குறித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்த தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. 
 எழுத்தாளர் பத்திரிகையாளர் பிரியா தம்பி தனது பதிவில் விமான நிலையத்தை பஸ் ஸ்டாண்ட் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், விமானநிலையம் தான் வந்திறங்கிய போது பூட்டப்பட்டிருந்தது எனக் குறிப்பிட்டிருந்த அவர்,

'அற்புதமான பறவைகள் ஒலி. ஒரு பறவை பூனை குரலில் கத்திக் கொண்டிருந்தது. ஆஹா என வியந்தபடி டிராலியில் பெட்டிகளை வைத்து தள்ளிக் கொண்டே காரை அனுப்பிவிட்டு திரும்பினால், அதிர்ச்சி. விமான நிலையம் பூட்டப்பட்டிருந்தது. யாருமே இல்லை. என்னடா இது என திகைத்து நிற்க… ஒரு போலீஸ்காரர் வந்தார். அது 5.30 – 5.30 க்கு செயல்படும் விமானநிலையம் என்கிற விஷயத்தை அவர்தான் சொன்னார். கதவைத் திறந்து வெயிட்டிங் ஹாலில் உட்கார வைத்தார். அங்கே நான், மின்னு, என் தம்பி, அந்த போலீஸ்காரர் தவிர யாருமே இல்லை.. வெயிட்டிங் ஹால் சேர்கள் ஆடிக் கொண்டிருந்தன. தரையில் சில அட்டைப்பூச்சிகள். அந்த வெயிட்டிங் ஹால் என் வீட்டு ஹாலை விட சற்றுப் பெரிதாக இருந்தது. வலதுபக்கம் staff only என அட்டை தொங்கவிடப் பட்ட இன்னொரு ஹால்.



இண்டிகோ என டீ ஷர்ட் அணிந்த ஒருவர் வந்து ஃபேன் போட்டு, அங்கே இருந்த பழைய டிவியில் எங்களுக்கு சுப்ரபாதம் போட்டு விட்டு சென்றார். 5.30 மணி தாண்டியதும் இண்டிகோ என டீ ஷர்ட் அணிந்த பணியாளர்கள், போலீஸ்காரர்கள் என ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். ‘’ஏழு , ஏழரைக்கு வந்தா போதாதா, இப்பவே என்னத்துக்கு வந்திய?’’ என ஒருவர் கேட்டுப்போனார். அந்த ஹாலில் வலது பக்கம் இருந்த சிறிய காஃபி கடையை ஒருவர் திறந்தார். காஃபி கேட்டால், நேரம் ஆகும் என சொன்னார். மூன்று சென்னை விமானங்கள், ஒரு பெங்களூர் விமானம் என அன்று மொத்தம் நான்கு விமானங்கள் என போர்டு காட்டியது.



’’இது பஸ் ஸ்டாண்டை விட சின்னதா இருக்கு, நெஜமாவே இங்க ஃபிளைட் வருமா’’ என மின்னு கேட்டுக் கொண்டிருந்தாள். ஆறரை தாண்டியதும், பயணிகள் சிலர் வரத் தொடங்கினார்கள். விமான நிலையப் பயணிகள் உட்பட எங்கும் தூத்துக்குடி முகங்கள்.. தூத்துக்குடி தமிழ். வழக்கமாக விமான நிலையங்களில் காணும் வெண்மை முகங்களோ, ஆங்கிலமோ இல்லை.. பயணிகள் மிக ரிலாக்ஸாக ஆர்.எம்.கே.வி. பயணப்பைகளோடும், கட்டைப்பைகளோடும் வரத் தொடங்கினார்கள். இண்டிகோ பணியாளர் அவர்களை வாசலில் போய் வரவேற்று, உடைமைகளை வாங்கி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்.



மூன்று மணிக்கு கிளம்பியதால், இரவில் தூங்கியிருக்கவில்லை. பசி பிறாண்டியது. காஃபி கடையில் காஃபியைத் தவிர ஒன்றும் இருக்கவில்லை. செக் இன் செய்து காத்திருப்பில் இருந்தபோதும், ‘’வெளிய போய் சாப்பிட்டு ஓடிவந்திருங்க’’ என அனுமதித்தார்கள். ஏழரைக்கு பாதுகாப்பு சோதனைக்கு உள்ளே செல்ல சொன்னார்கள். கரிய, உயரமான, விபூதி அணிந்த ஒரு தூத்துக்குடி போலீஸ்காரர் சிரித்த முகத்தோடு உள்ளே அனுப்பினார். ‘’இங்க ஸ்டார்பக்ஸ் இருக்குமா?’’என மின்னு கேட்டாள். ‘’உள்ள கண்டிப்பா நிறைய கடைங்க இருக்கும்’’ என சொன்னேன்’ எனப் பதிவிட்டிருந்தார்...அவரது முழுப் பதிவு கீழே...


மரியம் ஜமாலியா என்னும் பேஸ்புக் பதிவரோ சிங்கப்பூர், மலேஷியா, துபாய், குவைத், பஹ்ரைன், ஆஸ்திரேலியா, பாரிஸ், ரோம், ஹாங்காங், சைனா, ஜித்தா, ரியாத், மதீனா, பம்பாய், டெல்லி, கல்கத்தா, சென்னைனு பார்த்த அத்தனை விமான நிலையங்களிலும் தன் மனதுக்கு நெருக்கம் தூத்துக்குடி ஏர்போர்ட்தான் எனக் குறிப்பிட்டுள்ளார். 



கால்வைக்கக் கூட இடமில்லாத இந்தக் கடும் மழையிலும் பேஸ்புக் பதிவர்களிடையே இந்த விவாதம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.