வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இப்படம் கடந்த நவ.25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, 100 நாள்களை கடந்து 100 கோடியை வசூலித்தது. 'மாநாடு' படத்துக்கு பிறகு ‘மன்மதலீலை’ என்று தலைப்பிடப்பட்ட படத்தை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு. இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.






வரும் ஏப்ரல் 1-ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ட்ரெய்லரில் கவர்ச்சி மசாலா சற்று தூக்கலாக இருக்க, அடல்ட் காமெடி திரைப்படம் என்பது தெளிவாகிறது. ஆனாலும் வெங்கட் பிரபுவிடம் பலர் கேள்விகள் கேட்ட வண்ணம் இருந்தனர். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு இது கில்மா படமெல்லாம் இல்லை எனக்கும் மகள்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனாலும், சர்ச்சை முடிந்தபாடில்லை. இணையத்தில் நெட்டிசன்கள் இயக்குநர் வெங்கட் பிரபுவை வறுத்தெடுத்து வருகிறார்கள். ''மாட்டிக் கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே… இப்படிக்கு மாட்டிக் கொண்டவர் என்று வெங்கட் பிரபு ட்ரெய்லரில் வாசகத்தை இடம்பெறச் செய்துள்ளது பெரும் பேசு பொருளாக ஆகியுள்ளது.






எல்லாவற்றையும் தாண்டி சினிமா ரசிகர்கள் பலர் படத்தின் ஹ்யூமரை ரசித்து புகழ்ந்து வருகின்றனர். பல சினிமா பிரபலங்கள் ட்ரெய்லரை பார்த்து சமூக வலைதளங்களில் வெங்கட் பிரபுவை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இதுபோன்ற கவர்ச்சிகளுக்கு சினிமாவில் முன்னத்தி ஏர் ஆன, எஸ்.ஜே.சூர்யா ட்ரெய்லரை வெளியிட்டு, "சார் இது வெங்கட் பிரபுவின் சேட்டைகள்" என்று கூறி சிரிப்பு சுமைலிகள் போட்டிருந்தார். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, "இந்த சேட்டைகளுக்கு விதை நீங்க போட்டதுதான் சார்" என்று கூறியிருக்கிறார். இவரது பதிவு வைரலாகி வருகிறது. நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளைச் சொல்லும் மன்மதலீலை படம் ஏப்ரல் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.