விக்ரம் திரைப்படம் வெளியாகி வசூல், புகழ், பாராட்டு என அனைத்து மழையிலும் நனைந்து கொண்டிருக்கிறது. படத்தில் கவுரவ தோற்றத்தில் , க்ளைமாக்ஸில் வந்த நடிகர் சூர்யாவின் வில்லன் கதாபாத்திரமும் பெரிதாக பேசப்படுகிறது. 




விக்ரம் அடுத்த பாகத்தில் கமலுடன் மோத தயாராகிவிட்டார் சூர்யா. சூர்யாவின் கதாபாத்திரம் எவ்வளவு கொடூரமானது என்பதை தெளிவாக காட்டிவிட்டார் இயக்குனர் யோகேஷ் கனகராஜ். அப்போதிலிருந்து ரோலக்ஸ் கதாபாத்திரம் கொடூரமாக சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 


இதெல்லாம் ஒருபுறமிருக்க, இன்று கொடூரமாக இருக்கும் ரோலக்ஸ், ஒரு காலத்தில் காண்ட்ராக்டர் நேசமணியிடம் அப்ரசென்டியாக இருந்தவர் , ப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவிடம் சூர்யா வேலை செய்யும் படங்களை பகிர்ந்து வருகின்றனர். 




சில ஆண்டுகளுக்கு முன், ப்ரெண்ட்ஸ் திரைப்படம் நினைவு கூறப்பட்ட போது, காண்டாக்டர் நேசமணி பெரிதாக பேசப்பட்டார். அந்த கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு, அப்போது பெற்ற புகழை விட, மீண்டும் பேசப்பட்ட போது, அதிகம் புகழை பெற்றார். 


#prayfornesamani என்கிற ஹேஸ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது. உண்மையிலேயே நேசமணி என்பவருக்காக அனைவரும் பிரார்த்திக்கிறார்கள் என்று, பலரும் தங்கள் பிரார்த்தனையை பதிவு செய்யத் தொடங்கினர். அதன் பின் உண்மை தெரிந்து, வயிறு குலுங்க சிரித்தவர்களும் உண்டு. 


என்ன தான் நேசமணி காமெடியனாக இருந்தாலும், தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் அவர் டெரராகவே இருந்தார். விஜய், சூர்யா உள்ளிட்ட அவரின் பணியாளர்கள் அனைவரும் அவரைப் பார்த்து பயந்து நடுங்கினர். நேசமணியின் டெரர் குணம் தான், இன்றைய ரோலக்ஸின் ரோல் மாடல் என கலாய்த்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். 


ப்ரெண்ட் படத்திற்குப் பின் சூர்யா எத்தனையோ ஆக்ஷன் படங்களில் நடித்துவிட்டார்; நடித்துக் கொண்டும் இருக்கிறார். அப்படி இருக்கும் போது, சிறப்பு  தோற்றத்தில் வந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஏன், நேசமணியோடு இணைக்கிறார்கள் என தெரியவில்லை.




பழைய விக்ரம் படத்தையும், கைதி படத்தையும் விக்ரம் படத்தில் இணைக்கும் போது, நாங்கள் இணைக்கக் கூடாதா என கேட்பவர்களும் இருக்கிறார்கள். அதில் ஒரு நியாயமும் இருக்கிறது. எந்த திரைப்படம் வந்தாலும் அதற்கு மீம்ஸ் போட வடிவேலு கன்டெண்ட்டுகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.




அந்த வரிசையில் ரோலஸ்க் கதாபாத்திரத்தையும், கட்டி அணைத்துள்ளார் நேசமணி வடிவில் வடிவேலு. எங்கு பார்த்தாலும் ரோலக்ஸை டேமேஜ் செய்து, நேசமணியை களமிறக்குகிறது ஒரு குரூப். ‛எங்க நேசமணிகிட்ட கத்துகிட்ட வித்தையை, விக்ரமிடம் மொத்தமா காட்டுறீயா ரோலக்ஸ்’ என, காரசாரமாக கமெண்ட்ஸ் போடுவதை பார்க்கும் போது, சிரிப்பை அடிக்க முடியவில்லை. 


‛டே தொடைடா... கீழே தொடைடா.... தரைய தொடைடா...’ என்பதைப் போல, அனைத்து படத்திற்கும், பொருந்துகிறார் நேசமணி.