2020 தொடங்கியதில் இருந்து உலகத்தை முழுவதுமாக  புரட்டிப்போட்ட ஒரு விஷயம் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவியது அச்சுறுத்தும் இந்த பெருந்தொற்று. இந்த கொரோனாவின் இரண்டாவது அலை தற்பொழுது இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவியுள்ளது. ஆக்சிஜனுக்கும், படுக்கைகளுக்கும் மக்கள் படும்பாட்டை யாரும் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.




இந்த சூழலை மய்யமாக வைத்து கடந்த 2011-ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான் கண்டேஜியன். இந்தப் படம் 2002 முதல் 2004 வரை பரவிய சார்ஸ் வைரஸ் மற்றும் 2009 ஆண்டு பரவிய ஸ்வைன் ஃப்ளு நிகழ்வுகளை தழுவிய படமாக அமைந்திருக்கும். ஸ்டீவன் சோடெர்பெர்க் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஸ்காட் இசட் எழுதி, மைக்கேல் ஷாம்பெர்க், ஸ்டேசி ஷெர் மற்றும் கிரிகோரி ஜேக்கப்ஸ் ஆகியோரால் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் செப்டம்பர் 2011-ஆம் ஆண்டு இந்தப் படத்தை வெளியிட்டனர் .


மெடிக்கல் த்ரில்லர் திரைப்படமான கண்டேஜியன் 2011-இல் வெளிவந்தபோது, உலகளாவிய தொற்றுநோயின் நிலைமை மிக யதார்த்தமாக படமாக்கப்பட்டதை பார்த்து பலரும் பாராட்டிவந்தனர். கொரோனா பரவிய பின்பு 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமா ஆர்வலர்கள்  இந்தப் படத்தில் ஆர்வம் காட்டியுள்ளனர். கொரோனாவின் இன்றைய அவலங்களை இப்படத்தை பார்க்கும்போது, அனைவராலும் இன்றைய சூழலுடன் இணைத்துப் புரிந்துகொள்ளமுடியும். எந்த அளவுக்கு மனித உணர்வுகளையும், பொருளாதாரத்தை பலியாக்கக்கூடியது பெருந்தொற்று என்பதை அப்படியே வடித்திருப்பார்கள்.




படத்தின் நடித்தவர்களும், கதாபாத்திரங்களும் :


டாக்டர் லியோனோரா ஆரன்டெஸாக மரியன் கோட்டிலார்ட், மிட்ச் எம்ஹாப்பாக மாட் டாமன், டாக்டர் எல்லிஸ் சீவர் ஆக லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், ஆலன் க்ரூம்வீடாக ஜூட் லா, பெத் எம்ஹாஃப் ஆக க்வினெத் பேல்ட்ரோ, டாக்டர் எரின் மியர்ஸாக கேட் வின்ஸ்லெட், ரியர் அட்மிரல் லைல் ஹாகெர்டியாக பிரையன் க்ரான்ஸ்டன், ஆப்ரி சீவராக சனா லதன், டாக்டர் ஆலி ஹெக்ஸ்டாலாக ஜெனிபர் எஹ்லே, டாக்டர் டேவிட் ஐசன்பெர்க்காக டெமெட்ரி மார்டின், டாக்டர் இயன் சுஸ்மானாக எலியட் கோல்ட், சன் ஃபெங்காக சின் ஹான் மற்றும் கிளார்க் மோரோவாக கிரிஃபின் கேன் போன்றோர் இந்த படத்தில் நடித்துள்ளனர் .


கதையின் சுருக்கம் : 


சீனாவில் இருந்து தனது அலுவல் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும் பெத் எம்ஹாஃப் சில நாட்களிலே திடீர் என்று மயங்கி விழுவார். மிக விரைவாக தனது மனைவியை மருத்துவமனையில் சேர்ப்பார் கணவர் மிட்ச். பெத் எம்ஹாஃப் சிகிச்சை பலன் இன்றி இறந்துவிடுவார். இதனை தொடர்ந்து பெத் எம்ஹாஃப் மகனும் மயக்கமுற்று தனது வீட்டிலேயே இறந்துவிடுவான். இந்த நிகழ்வு நடக்கும் இந்த வேளையில் சீனாவில் பலரும் இதேபோலவே இறந்து போவார்கள். இந்த நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உலக சுகாதார மய்யம் கலத்தில் இறங்கும் .




பெத் தான் முதலில் பாதிக்கப்பட்டார் என்று அறிந்து அவரின் ஊருக்கு மருத்துவ ஆராய்ச்சி  குழு செல்லும் . இந்த வைரஸ் தோன்றிய மூலத்தை அறிய சீனாவும் உலக சுகாதார அமைப்புடன் தனது குழுவையும் அனுப்பிவைக்கும் . இந்த வைரஸ் ஒரு உயிரியல் ஆயுதமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் அவர்களுக்கு வலுத்திருக்கும். மருத்துவ அறிஞர் அனா எல்லிஸ் என்பவரின் உதவியை அந்தக் குழு நாடும். இதற்கு நடுவில் கார்ப்பரேட்டுகளின் சதி என்றும், இன்னும் சிக கதைகளையும் ஒரு தரப்பு சொல்லும். இறுதியில் இந்த வைரஸுக்கு மருந்துகண்டுபிடிக்கப்பட்டதா இல்லையா என்பதைத்தான் காட்டியிருப்பார்கள்.




இன்று நாம் அனுபவித்து வரும் பதற்றத்தை டைம் ட்ராவம் செய்து எழுதிய கதை போன்றதுதான் கண்டேஜியன். பதற்றமான சூழ்நிலை எவ்வாறு கையை மீறிப்போகிறது என்பதை இத்திரைப்படத்தில் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.