என்.டி.ராமாராவ் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துகள் சமூகவலைத்தளத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


நேற்று  முன்தினம் ஆந்திர மாநில மறைந்த முதலமைச்சர் என்.டி.ராமாராவின் 100வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, என்.டி.ராமாராவின் மகனும், நடிகருமான நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக விமான நிலையம் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. 


ரஜினிகாந்த் பேச்சு


இந்நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடுவை குறித்து ரஜினி பேசினார். அப்போது, சந்திரபாபு நாயுடு தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவர். அதன் காரணமாகவே ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக மாறியுள்ளது. எனக்கும் சந்திரபாபு நாயுடுவிற்கும் 30 ஆண்டு கால நட்பு உள்ளது. அதனால் ஒவ்வொரு முறையுல் ஹைதராபாத் வரும்போது நான் அவரை சந்தித்து பேசுவேன். அவருடைய பேச்சில் ஏராளமான விஷயங்கள் அடங்கி இருக்கும். சர்வதேச அரசியலிலும் சந்திரபாபுவுக்கு நல்ல பிடிப்பு உள்ளது. அவர் அரசியலில் ஒரு தீர்க்கதரிசி  எனவும் ரஜினிகாந்த் புகழ்ந்து தள்ளினார். 


விமர்சித்த ரோஜா


இந்த பேச்சு ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பியது என்றே சொல்லலாம். ரஜினியின் பேச்சுக்கு பதிலளித்த ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சரான நடிகை ரோஜா, ‘அவரின் பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் இருக்கிறது. நடிகராக அவர் மேல் எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் தெலுங்கு மாநில அரசியல் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது’ என சரமாரியாக விமர்சித்தார். மேலும், ‘தனது பேச்சின் போது, சந்திரபாபு நாயுடு மீது என்.டி.ஆர் ஆசிகளை பொழிவதாக ரஜினி கூறினார். ஆனால் என்.டி.ஆர் மரணத்திற்கே காரணம் அவர் தான் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய மருமகன் ஒரு திருடன் என என்.டி.ஆர் சொன்ன சிடியை ரஜினிக்கு நான் அனுப்பி வைக்கிறேன்’ எனவும் ரோஜா கூறினார்.  


சமூக வலைத்தளங்களில் மோதல் 


ரஜினியின் இந்த பேச்சு ஆந்திர மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் #RajinikanthShouldApologizeToApPeople என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. அதேசமயம் ரோஜா சார்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி #YSRCPApologizesRAJINI  என்ற ஹேஸ்டேக் இணையத்தில் வைரலாகியுள்ளது.