நடிகராக இருந்து தற்போது பத்திரிகையாளர் என்னும் பெயரில் வலம் வந்து கொண்டிருக்கும் பயில்வான் ரங்கநாதன், சினிமா தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், வில்லங்கமாக கேள்வி எழுப்பி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஒரு வழியாக்குவார் என்று பரவலாக பேச்சு உண்டு. 80-களுக்கு முன்பிருந்தே அவர் சினிமாவில் வலம் வருபவர் என்பதால், அப்போதைய சினிமா பிரபலங்களுடன் தனக்கு இருந்த நெருக்கத்தை வைத்து, அவர்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்வார். மேலும், பெண் குறித்து தகாத வார்த்தைகளில் பேசுவார் என அறியப்படுபவர்.
இப்போது, சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து தரக்குறைவாக பதிவிடுவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் வன்னியரசு போட்ட ட்வீட்டால் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கைது ஆகுவரா? என்று சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார்கள். இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் சினிமா பிரபலங்கள் பற்றி அவதூறாக பேசி வருகிறார்.
சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
சமீப காலமாக இவர் நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் எப்படி நடிகர்களுக்கு விவாகரத்து ஆனது என்பது குறித்தும், நடிகைகளுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகளை பேசி வருகிறார்.
இந்நிலையில், இவர் மீது ஜெ.ஜெ.நகா் பகுதியைச் சோ்ந்த அ.சோனியா, சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நடிகா் பயில்வான் ரங்கநாதன் யூ-டியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பெண்களை ஆபாசமாகவும், இழிவுப்படுத்தியும்
பேசி வருகிறார். அவருடைய பேச்சு ஒட்டுமொத்த பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் சிதைக்கிறது. பொது வெளியில் ரங்கநாதன் இவ்வாறு பேசுவது குற்றமாகும் என்று புகார் அளித்துள்ளார்.
மேலும், இப்படி,கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஆபாசமாக பேசும் ரங்கநாதன் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாா் குறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.