தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறதாம். அந்த அளவிற்கு சார் ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு மட்டும் இதுவரையில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள 17 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் என்ட்ரி கன்ஃபார்ம் :
2009ம் ஆண்டு வெளியான "யோகி" திரைப்படம் மூலம் அறிமுகமானதால் இவர் யோகி பாபு என்று அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவின் பெரும்பாலான ஹீரோக்களுடன் இணைந்து காமெடியில் கலக்கிய யோகி பாபு ஹீரோவாகவும் நடித்துள்ளார். அந்த வகையில் யோகி பாபு பாலிவுட் படத்தின் நடிகர் ஷாருக்கான் படத்தில் நடிக்க உள்ளார் என்ற வதந்தி சில மாதங்களாகவே பரவி வந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இரண்டாவது முறையாக இணையும் யோகி பாபு - ஷாருக்கான் :
இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் ஒரு இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் "ஜவான்". நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகர் யோகி பாபு இணையவுள்ளார். 2013ம் ஆண்டு வெளியான 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்திற்கு பிறகு எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 'ஜவான்' திரைப்படம் மூலம் மீண்டும் இரண்டாவது முறையாக நடிகர் ஷாருக்கானுடன் நடிக்கிறார் யோகி பாபு. 'ஜவான்' மூலம் இந்த வாய்ப்பை கொடுத்து இயக்குனர் அட்லீக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் யோகி பாபு.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு :
யோகி பாபு இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சவாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். " நடிகர் ஷாருக்கானுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கிறேன். அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. வாய்ப்பளித்து இயக்குனர் அட்லீக்கு நன்றிகள். என் முக தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரங்களில் தான் நடிக்க முடியும். அது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் தான் ஜவான் திரைப்படத்திலும் நடிக்கிறேன். மண்டேலா போன்ற படத்தில் ஹீரோ நடித்தால் ஒர்க் அவுட் ஆகாது. சில நேரங்களில் தான் சோலோவாக நடிப்பது ஹிட்டாகும். எல்லா நேரங்களிலும் அது போல ஹீரோவாக நடிக்க முடியாது. நகைச்சுவையை தாண்டி என்னால் போக முடியாது. அது தான் எனக்கு கை கொடுத்தது " என்றார் யோகி பாபு.