தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவில் சிறப்பான காமெடியன்களாக இருந்து ஹீரோவானவர்கள் பலர் உண்டு. அப்படி ஹீரோவானவர்களில் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலரே. அப்படி நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடியனாக கலக்கி தனக்கென ஒரு ஸ்டைல் மற்றும் ட்ரெண்ட் செட் செய்து சாம்ராஜ்யத்தை உண்டாக்கிய சந்தானம் திடீரென இனிமேல் நான் காமெடியாக நடிக்காமல் ஹீரோவாக களத்தில் இறங்க போகிறேன் என ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
அப்படி காமெடி கிங் சந்தானம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் 2014ம் ஆண்டு வெளியான 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' திரைப்படம். ஸ்ரீநாத் இயக்கத்தில் சந்தானம், செந்தில்குமார், ஆஷ்னா சவேரி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதனுடன் நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இது ராஜமௌலியின் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'மரியாத ராமண்ணா' என்ற படத்தின் தமிழ் ரீ மேக் படமாகும்.
100 படங்களுக்கு மேல் காமெடியனாக கலக்கிய சந்தானம் முதல் முறையாக ஹீரோவாக என்ட்ரி கொடுக்கிறார் என்றதும் ஏராளமான கிண்டல் பேச்சுகள் எழுந்தன. அதையும் கடந்து சந்தானம் இன்றும் தான் எடுத்து வைத்த அடியில் இருந்து பின்வாங்காமல் கெத்து காட்டுகிறார்.
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் ஹீரோ சற்று அப்பாவித்தனமாக இருக்க வேண்டும் அதோடு மக்கள் மத்தியில் கைத்தட்டல்களையும் அல்ல வேண்டும் என்பது தான் இயக்குனரின் தேடலாக இருந்தது. ஒரு எஸ்டாபிளிஷ்டு ஹீரோவாக இருந்தால் ரசிகர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அதற்கு சிறந்த சாய்ஸ் என்றால் காமெடியன் தான் என்ற முடிவில் இயக்குனர் சந்தானத்தை ஹீரோவாக தேர்ந்து எடுத்துள்ளார். வழக்கமான காமெடியுடன் சில பஞ்ச் வசனங்கள் மட்டுமே பேசி ஹீரோவாகமல் படத்திற்காக தன்னை சண்டை, டான்ஸ் என அனைத்திற்கும் தயார் படுத்தி நடித்து இருந்தார். பல பேரை அசால்டாக கலாய்த்துள்ள சந்தானம் தன்னை பற்றி யாரும் சொல்லிக்காட்டிவிட கூடாதென ஜிம், ஒர்கவுட், டான்ஸ் பயிற்சி என கொஞ்சம் கொஞ்சமாக தயார்ப்படுத்தி ஹீரோ லுக் கொண்டுவந்து இருந்தார். ஈஸியாக யாரும் காமெடியாக இருந்து நேரடியாக ஒரு ஹீரோவாக எல்லாம் ஆகிவிட முடியாது. ஒரு ஹீரோ என்றால் அவருக்கு என்னென்ன குவாலிட்டி தேவையோ கொஞ்சமாவது கொண்டு வந்தால் தான் மக்கள் நம்மை ஹீரோவாக ஏற்றுக் கொள்வார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டவர் சந்தானம்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் தொடங்கிய சந்தானத்தின் ஹீரோ பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்கிறது. தனக்கு ஏற்ற ஸ்டைலில் படங்களை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் அவரின் ஹீரோ பயணம் தொடர்கிறது.