தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் செந்தில் போலவே தோற்றமளிக்கும் ஒருவர் தான் நடிகர் ஜெயமணி. ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக பரிச்சயமானவர். நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்த வராதது குறித்து ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது குறித்து நடிகர் ஜெயமணி சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
”கடந்த 2023ம் ஆண்டு திரையுலகத்தில் ஏராளமான உயிர் இழப்புகள் ஏற்பட்டது. அதிலும் ஆண்டு முடியும் தருவாயில் கூட கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தது மிக பெரிய துயரத்தை ஏற்படுத்தியது. அவரின் மறைவுக்கு அலைகடல் போல மக்கள் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆனால் அவரின் இறப்புக்கு நடிகர் வடிவேலு வராததை வைத்து சோசியல் மீடியாவில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். இது மிகவும் தவறான ஒரு செயல். வடிவேலுவை பிடிக்காதவர்கள்தான் இது போல தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையில் பெரிய பிரச்சினை நடந்தது. அவர் வீடியோ மூலமாவது அல்லது ஒரு இரங்கலையாவது தெரிவித்து இருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. அதற்காக என்ன செய்ய முடியும். அவர் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது அத்தனை பேரும் அவர் பின்னாடி வாலை ஆட்டிக்கிட்டு போயிட்டு இருந்தாங்க. வாசலில் போய் காத்துக்கிடந்தாங்க. ஆனா இப்போ அவர் மார்க்கெட் குறைஞ்சு போனதால அவரால வாய்ப்பு கிடைத்து அடையாளம் காணப்பட்டவனுங்க எல்லாரும் அவன் சரியில்லை, அவனோட இனி நான் நடிக்க மாட்டேன் அப்படின்னு வந்து பேட்டி கொடுக்குறானுங்க. வளர்த்து விட்டவரேயே இப்படி பேசலாமா?
போண்டா மணி இறந்த சமயத்தில் அவரோட குடும்பத்துக்கு வடிவேலு பணம் கொடுக்கவில்லை என பயங்கரமாக பேசுகிறார்கள். அவர் ஏன் பணம் கொடுக்கணும்? அவர் இப்போ மார்க்கெட்டுல இல்லவே இல்லையே. ரஜினி,கமல்,அஜித், விஜய்கிட்ட எல்லாம் போய் பணம் கேட்க வேண்டியதுதானே. அவர் செய்யணும் என நினைச்ச இருந்தா செய்து இருக்கலாம். ஆனா அவர் செய்யல, அவர் மனசுல என்ன இருக்கோ தெரியல... அதுக்கு என்ன பண்ண முடியும். வடிவேலுவை திட்டினால் நாம பெரியா ஆளா ஆயிடலாம் என தப்பு கணக்கு போட்டு இப்படி பண்ணறாங்க.
சோசியல் மீடியாவில் அவர் பத்தி தப்பு தப்பா வீடியோ போடுறது ரொம்ப தப்பு. உனக்கு பிரச்சினை என்றால் நேரடியாக வடிவேலுக்கிட்டே போய் கேட்க வேண்டியது தானே. அதை விட்டுட்டு அவன்கிட்டேயும் இவன்கிட்டேயும் எதுக்கு போய் கேக்கணும்.
வடிவேலு மரியாதை கொடுக்கமாட்டாரு, தரக்குறைவா பேசுவாரு, எங்களை இழிவு படுத்துவாரு என அவர் கூட நடிச்சவனுங்க எல்லாரும் சொல்றாங்க இல்ல அப்ப எதுக்கு அவரு கிட்ட போகணும், காத்து கிடக்கணும், காலிலேயே விழுந்து கிடக்கணும். அவரு வாய்ப்பு கொடுப்பாரா என எதிர்பார்த்து பின்னால வளர்ந்ததுக்கு அப்புறம் அவரை அசிங்கபடுத்துறது தேவையா?
இன்று இருக்கும் ஹீரோக்கள் பலரும் ரசிகர்கள் அவர்களை நெருங்குகிறார்கள் என்றால் அவர்களின், உதவியாளர்களை வைத்து விரட்டி அடிக்க தான் நினைக்குறாங்க. நேரில் பார்த்தா மட்டும் சும்மா அப்படியே பாசத்தை பொழிவது போல நடிக்குறாங்க. ஆனால் விஜயகாந்த் அப்படிப்பட்டவர் கிடையாது. ரசிகர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார். செட்டில் எல்லாரோடும் ரொம்ப நல்லா பழகுவார். மக்கள் செல்வாக்கு அதிகம் கொண்டவர். அவருக்கு மட்டும் உடல்நிலை நல்லா இருந்ததுன்னு இன்னைக்கு அவர் தான் முதலமைச்சராக இருந்து இருப்பார்” என்றார்