கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் காலமான நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று


நகைச்சுவை நடிகர் குமரிமுத்து




தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களின் பட்டிய மிக நீண்டது. இவர்களில் ஒவ்வொரு நடிகரும் ஒரு தனித்துவமான அடையாளத்தால் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்கள். அப்படி தனது சிரிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து. சினிமாத் துறையில் பல்வேறு சவால்களை கடந்து தனக்கான அடையாளத்தை உருவாக்க போராடியவர் குமரிமுத்து. குமரிமுத்துவின் நிஜப் பெயர் முத்தையா. தனது 15 வயதில் கன்யாகுமரியில் இருந்து சென்னைக்கு பிழைப்பிற்காக வந்தவர் குமரிமுத்து. அவரை முதல் முதலில் திரையில் அறிமுகப்படுத்தியவர் நடிகர் நாகேஷ். 1971 ஆம் ஆண்டு வெளியான ‘பொய் சொல்லாதே ‘ படத்தின் மூலமாக திரையில் அறிமுகமானார் நடிகர் குமரிமுத்து. 


குமரிமுத்துவின் சிரிப்பு




குமரிமுத்து என்றாலே அவரது சிரிப்பு தான் ரசிகர் மத்தியில் முதலில் நினைவுக்கு வருவது. இந்த சிரிப்பு அவரது தனித்துவமான அடையாளமாக மாறியதற்கு பின் ஒரு கதை இருக்கிறது.  ‘மனசுக்குள் மத்தாப்பு’ என்கிற படத்தில் நடிகர் குமரிமுத்து மருத்துவர் கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வந்தார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எதார்த்தமாக சிரித்துள்ளார். அதை பார்த்த இயக்குநர் இதே சிரிப்பை படத்திலும் சிரிக்கச் சொல்லியிருக்கிறார், அன்றிலிருந்து அவரது சிரிப்பே அவரது அடையாளமாக மாறிப்போனது என்று குமரிமுத்துவின் மகள் எலிசபெத் பேட்டி ஒன்றில் தெர்வித்துள்ளார்.


தனது ஒட்டுமொத்த வாழ்நாளில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் குமரிமுத்து. 1970 முதல் வெளியான படஙகளில் அவரது முகத்தை பார்க்காத படங்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் . எம்.ஜி.ஆர் , சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் , அஜித் என தமிழ் சினிமாவின் எல்லா தலைமுறை ஸ்டார்களுடனும் அவர் நடித்துள்ளார். 


குமரிமுத்து அரசியல் பயணம்


மறைந்த முதலமைச்சர் கலைஞர் மீதும் திராவிட கொள்கைகளின் மீதும் தீவிர பற்று கொண்டிருந்தார் குமரிமுத்து. இதன் விளைவாக திமுக வின் பிரபல பேச்சாளராகவும் இருந்தார்.  கடந்த 2016 ஆம் ஆண்டும்  உடல்நல குறைவால் காலமானார் குமரிமுத்து. அவரது இறப்பு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பாக இருந்துள்ளது. சில நடிகர்களை அவர்கள் பேசிய வசனம் மூலம் நான் நினைவு கூர்வோம். சிலரை அவர்களின் உடல்மொழியை வைத்து . ஆனால் குமரிமுத்துவை பொறுத்தவரை அவரது சிரிப்பு தான் அவரது அடையாளம். இந்த உலகின் எந்த மூலையில் இருந்து ஒலித்தாலும் ஒரு தமிழ் திரைப்பட ரசிகரால் குமரி முத்துவின் சிரிப்பை அடையாளம் கண்டுவிட முடியும், இன்றுடன் குமரிமுத்து இறந்து 8 ஆண்டுகள் கடந்துள்ளன. இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மக்களால் நினைவுகூரப்படுவார் குமரிமுத்து.